மகளிர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை எதிர்க்கட்சித் தலைவர் வெட்டிச்செலவு எனக்குறிப்பிடுகிறாரா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இன்று சட்டப்பேரவையின் கடைசி உரையை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டதோடு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்தார்.

நிதி நெருக்கடியில் தமிழகம்:
மத்திய அரசு தன்னுடைய திட்டங்களுக்குத் தேவைப்படுகிற நிதியை தமிழ்நாடு அரசு மீது திணிப்பதால், மாநில அரசினுடைய முன்னுரிமைத் திட்டங்களுக்குப் போதிய நிதியளிப்பு இல்லாமலே போகிறது. இப்போது நான் சொன்னதில் இருந்தே தமிழ்நாட்டினுடைய நிதிநிலைமையை நீங்கள் புரிந்துகொள்ளலாம். இத்தனைக்கும் இடையில்தான், எல்லாவற்றையும் சமாளித்து, மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றிக்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் - தேமுதிக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி:
நேற்று சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் வருவாய் உயர்ந்திருந்தாலும், அரசின் கடன் சுமை பெருமளவு உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் செலவுகளை 'வெட்டி செலவுகள்' என்றும் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட கடன் பிரச்சினை குறித்து, நேற்றைக்கு, நிதியமைச்சர் விளக்கமளித்திருந்த நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் விளக்கம் அளித்துள்ளார்.

ஒவ்வொரு மாநில அரசும் வாங்கத் தகுதியான கடன் அளவு, அதன் பொருளாதார உற்பத்தி மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அந்த வரம்புகளுக்கு உட்பட்டுதான் தமிழ்நாடு அரசு கடன் வாங்கியிருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
எது வெட்டிச் செலவு?
தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் பல மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட முதல்வர், இது எல்லாமே தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களின் நலனுக்காகத்தான் செய்யப்படுவதாக கூறினார். விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற இந்தத் திட்டங்களுக்கு மேற்கொள்ளப்படக்கூடிய செலவுகள் எல்லாம் வெட்டிச் செலவுகள் என்றுதான் எதிர்க்கட்சித் தலைவர் நினைக்கிறாரா என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், பெண்கள், மாணவ, மாணவிகளுடைய சமூக, பொருளாதாரக் கல்வி முன்னேற்றத்துக்காக செய்கிற செலவுகளை எதிர்காலத் தமிழ்நாட்டுக்கான முதலீடாகாத்தான் நான் பார்க்கிறேன். இந்தத் திட்டங்களின்கீழ் பயன்பெறும் கோடானுகோடி பயனாளிகளிடத்தில், "உங்களுக்காக திராவிட மாடல் அரசு மேற்கொள்ளுகிற செலவு வெட்டிச் செலவு"-னு சொல்ல எதிர்க்கட்சி தலைவர் தயாராக இருக்கிறாரா? என்றார்.
இதையும் படிங்க: திமுக வேட்பாளரை பழி தீர்க்க திட்டம்.... ஈரோடு அஸ்திரத்தை கையில் எடுக்கும் பிரேமலதா விஜயகாந்த்!