காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கண்காணிப்பில் இருந்து வந்த அவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமானதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரசியல் கட்சியினர் உட்பட அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குமரி அனந்தன் உடல் அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமரி அனந்தனின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது தந்தையின் மறைவு துக்கத்தை தாளாமல் தமிழிசை சௌந்தரராஜன் கதறி அழுதார். தமிழிசையின் கைகளை பிடித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... தந்தை மறைவு பற்றி தமிழிசையின் உருக்கமான பதிவு...

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழே தன் மூச்செனத் தமிழ் திருப்பணி செய்த குமரி அனந்தன் திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய அய்யா குமரி அனந்தன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் “தகைசால் தமிழர்" கடந்த ஆண்டு வழங்கி கௌரவித்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், குமரி அனந்தன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்..!