மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் மர்ம நோயால் 53 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பான World Health Organization (WHO) தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி காங்கோவில் 419 பேருக்கு இந்த மர்ம நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. நோய் அறிகுறி உறுதிபடுத்தப்பட்ட 48 மணி நேரத்தில் தீவிர வயிற்றுப்போக்கு, ரத்த வாந்தி காரணமாக நோயாளிகள் இறப்பது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நோய் தாக்கும் நேரத்தில் இருந்து உயிரிழப்பு ஏற்படும் நேரம் மிகக்குறைவு என்பதால் மீண்டும் ஒரு பேரழிவை உலகம் சந்திக்க வேண்டி இருக்குமோ என ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முதலில் காங்கோவில் உள்ள போலோகோ கிராமத்தில் வவ்வால் கறியை சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு இந்த மர்ம நோய் கண்டறிப்பட்டது. அதனால் இந்த மர்ம நோய், வவ்வால் மூலம் மனிதனுக்கு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு முன் இதுபோல் கடந்த 2019ல் வவ்வால் மூலம் பரவியதே கொரோனா என்னும் பெருந்தொற்று. உலகம் முழுவதும் பலரையும் பழி வாங்கிய இந்த தொற்று நோய். மனிதர்களை வீட்டிலேயே முடங்க செய்தது. தற்போது வவ்வால் கறி சாப்பிட்ட சிறுவர்களால் மீண்டும் ஒரு பெருந்தொற்று பரவ உள்ளதோ என மருத்துவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: குமரி கடற்பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டம்.. தமிழக மீனவர்களை குழிதோண்டி புதைக்கப் போகிறார்களா..?

மர்ம நோய் பரவ ஆரம்பித்ததும், நோய் பாதிப்புக்குள்ளான 13 நபரின் மாதிரிகளை ஆய்வுக்காக காங்கோ தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சில மாதிரிகளில் மலேரியா இருப்பதாக பதிவாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல், தற்போது பரவிக்கொண்டிருக்கும் மர்ம நோயின் அறிகுறிகள் எபோலோ, மார்பர்க், டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளின் அறிகுறிகளோடு மேட்ச் ஆவதாகவும், இது ரத்தக்கசிவினால் பரவும் நோய்த்தொற்று அல்ல என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாகவே காட்டு விலங்குகளை சாப்பிடும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் தொற்றும் அபாயம் அதிகம் தென்படும். ஆப்ரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் இவ்வாறு நோய்ப்பரவல் ஏற்படுவது 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக கடந்த 2022-இல் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டும் காங்கோவில் பெயர் அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவியது. டிசம்பர் மாத தொடக்கத்தில், நாட்டின் பான்சி சுகாதார மண்டலத்தில் மட்டும் அந்த நோய்க்கு 143 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு, அக்டோபர் 29 முதல் இந்த நோய்க்குப் பாதிக்கப்பட்ட மக்களில் அப்போது 592 பேர் இறந்ததாகவும் கூறப்பட்டது. தற்போது புதிய மர்ம நோய் உண்டாகியிருப்பது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நோயின் அறிகுறிகளில் காய்ச்சல், வாந்தி மற்றும் உட்புற ரத்தப்போக்கு ஆகியவை தென்படுகின்றன. நோய் பாதிப்பு ஏற்பட்ட பெரும்பாலான நோயாளிகள், அடுத்த 48 மணி நேரத்திற்குள் உயிரிழக்கின்றனர். அறிகுறிகளுக்கும் இறப்புக்கும் இடையிலான இந்த குறுகிய இடைவெளி மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த நோயின் சரியான தோற்றம் மற்றும் தன்மை இன்னும் தெரியவில்லை. காங்கோவில் காணப்படும் பலவீனமான சுகாதார உள்கட்டமைப்பு, நோய் மேலும் பரவுவதற்கான அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. மர்ம நோயைக் உடனடியாக கட்டுப்படுத்த ஒரு உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: சொந்த கட்சிக்கே கைகொடுக்காத பி.கே.வியூகம்: விஜய்க்கு ஒர்க் அவுட் ஆகுமா..?- தொடரும் சறுக்கல்கள்..!