ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு லாட்டரியில் பணம் விழுந்து விடும். உடனே அவர் துள்ளி குதித்து இப்போ நான் எதையாச்சும் வாங்கியாகணுமே, இந்த தெரு என்ன விலை என்று கேட்பார். கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் இருக்கிறார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். ஏற்கனவே கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கி குவித்து வரும் அவர், இப்போது சாட்ஜிபிடி-யை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக 97.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தர முன்வந்துள்ளாராம்.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் அதனை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன். அந்நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி இணையஉலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது எனலாம். இந்நிலையில் நேற்று ஓபன்ஏஐ நிறுவனத்தின் Board Meeting நடைபெற்றுள்ளதாம். அதில் டெஸ்லா நிறுவனத்தின் வழக்கறிஞரான மார்க் டோபரா திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளார். அதாவது 97.4 பில்லியன் டாலர் மதிப்பில் ஓபன்ஏஐ நிறுவனத்தை வாங்க மஸ்க் முன்வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு ஓபன்ஏஐ நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. கூடவே ட்விட்டர் நிறுவனம் என்ன விலை என்று கூறுங்கள், நாங்கள் வேண்டுமானால் வாங்கிக் கொள்கிறோம் என ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் காட்டமாக கூறியுள்ளாராம்.
இதையும் படிங்க: கஜாபுயல் இழப்பீட்டுத் தொகை இன்னும் கிடைக்கவில்லையா? இப்போதே மனு கொடுங்கள்.. நிவாரணம் தர அரசு தயார்..
இதன் பின்னணி என்னவென்று ஆராய்ந்தால், ஓபன்ஏஐ நிறுவனத்தை லாபநோக்கமற்ற மாற்றி செயற்கை நுண்ணறிவு துறையில் ஸ்டார்கேட் என்ற பெயரில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சாம் ஆல்ட்மேன் திட்டமிட்டுள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே சாப்ட்பேங்க் நிறுவனம் 40 பில்லியன் டாலர் நிதியை ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு தர இசைந்துள்ளது. இதன்மூலம் அதன் மூலதன மதிப்பு 300 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

2015-ம் ஆண்டு சாம் ஆல்ட்மேனும், எலான் மஸ்க்கும் இணைந்து தான் ஓபன்ஏஐ நிறுவனத்தை உருவாக்கினார்கள். ஆனால், எந்த நோக்கத்திற்காக இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதோ அதில் இருந்து திசைமாறி பயணிப்பதாக கூறி 2019-ம் ஆண்டு எலான் மஸ்க் வெளியேறினார். மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்து சாம் ஆல்ட்மேன் லாபநோக்கோடு செயல்பட்டதாக மஸ்க் அப்போது குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த சூழ்நிலையில் தான், ஓபன்ஏஐ நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியை எலான் மஸ்க் ஆரம்பித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவும் எலான் மஸ்க்குக்கு இருப்பதால் ஓபன்ஏஐ விவகாரத்தில் அதிரடி திருப்பங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக நிர்வாகிகளுடன் 2-வது நாளாக பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை..