ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இ.பி.எஃப்.ஓ கீழ் உள்ள தனியார் ஊழியர்கள் நீண்ட காலமாக தங்கள் குறைந்தபட்ச ஓய்வு ஊதியத்தை (பென்ஷன்) உயர்த்த கோரி வருகிறார்கள். தற்போது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், மாதம் குறைந்தபட்ச பென்ஷன் தொகை அப்படியே மாறாமல் அதே ஆயிரம் ரூபாயாக இருந்து வருகிறது

சமீப காலமாக ஊழியர்கள் சங்கத்தினர் இந்த குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று மிக தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் பிரிவில் பத்திரிகையாளர்களும் இடம்பெற்றுள்ளனர். கேரள மாநில பத்திரிகையாளர்கள் உச்ச நீதிமன்றம் வரை சட்ட போராட்டம் நடத்தி அரசு ஊழியர்களுக்கு இணையாக தற்போது பென்ஷன் பெற்று வருகிறார்கள்.
இதையும் படிங்க: "ஊனமுற்ற ராணுவ வீரரை, பென்ஷனுக்காக உச்சநீதிமன்றம் வரை இழுத்தடிப்பதா?" : மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம்
அதே நேரத்தில் அமைப்பு ரீதியாக இப்படி போராட பலம் இல்லாதவர்கள் விலைவாசி இப்படி விஷம் போல் உயர்ந்து வரும் நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்தபட்ச பென்ஷன்தொகை அதே 1000 ரூபாயில் இருந்து வருவதை மாற்றி அமைத்து 7500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் வகையில் இந்த கோரிக்கை நிறைவேறுவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போராட்ட இயக்கத்தின் முன்னணியில் இருந்த இபிஎஸ் 95 என்று அழைக்கப்படும் தேசிய போராட்டக் குழு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தங்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது "உங்கள் கோரிக்கை அனுதாபத்துடன் பரிசீலிக்கப்படும்" என்று, அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த குழுவிடம் உறுதி அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதைத்தொடர்ந்து இந்த பிரச்சனையில் தீர்க்கமான நடவடிக்கை எடுத்து குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு விரைவில் அறிவிக்குமாறு மத்திய அரசை அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த அமைப்பினர் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7500 ஆக உயர்த்த கோரும் அதே வேளையில் நிதியமைச்சர் உடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கங்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து ஐந்தாயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தன.
இருப்பினும் இபிஎஸ் 95 தேசிய போராட்ட குழுவினர் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை நிதி தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று கூறி மிக குறைவான தொகையை முன்மொழிந்ததற்காக மத்திய அமைச்சரை சந்தித்த தொழிலாளர் அமைப்புகளை கடுமையாக விமர்சித்தன.
2014 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஓய்வூதியத்தின் நிர்ணயிருப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு இருந்த போதிலும் சுமார் 37 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மாதம் ஆயிரத்திற்கும் குறைவாகவே பெறுகின்றனர் என்று அவர்கள் கூறினார்கள். இபிஎஸ் 95 திட்டத்தை நம்பி உள்ள பென்ஷன் தாரர்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்ய கணிசமான அதிகரிப்பு தேவை என்று அவர்கள் வாதாடி வருகிறார்கள்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும் இதில் உறுப்பினர்கள் தங்கள் அடிப்படை சம்பவத்தில் 12 சதவீதத்தை தங்கள் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிக்கிறார்கள். அவர்களின் உரிமையாளர்கள் அதே அளவு பங்களிப்பு வழங்குகிறார்கள் இருப்பினும் உரிமையாளர்களின் பங்களிப்பு பிரிக்கப்படுகிறது. 8.33% திட்டத்திற்கு ஒதுக்கப்படுகிறது மீதமுள்ள 3.67 சதவீதம் epf கணக்கிற்கு செல்கிறது
2014 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து பண வீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வந்த போதிலும் எந்த திருத்தங்களும் செய்யப்படவில்லை. ஓய்வூதியத்தில் நிதி நெருக்கடிகளை சமாளிக்க டி ஏ உடன்சேர்த்து மாதத்திற்கு 7500 ஆக உயர்த்துவது அவசியம் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் அழுத்தம் அதிகரித்து வருவதால் இபி ஓய்வூதியத்தை திருத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .கோரிக்கையை பரிசீலனை செய்வதாக நிதி அமைச்சர் உறுதி அளித்து இருப்பது ஓய்வூதியதாரர்கள் இடையே புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. இருப்பினும் அரசாங்கம் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்பது இன்னும் நிச்சயமற்ற தன்மையாகவே உள்ளது.

இதில் வருடத்துக்கு ஒரு செய்தி என்னவென்றால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்களிடமிருந்து இபிஎப் சந்தா பணம் பிடிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பல தொழிலாளர்கள் என்ன காரணத்தினாலோ அந்த பணத்தை வாங்காமல் இபிஎப் நிறுவனத்திடம் தேங்கி கிடக்கும் பணம் மட்டும் பல லட்சம் கோடி ரூபாய் என்று ஏற்கனவே அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் சாதாரணமாக எத்தனையோ இலவச ஓய்வூதியங்கள் தேர்தலை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரிந்த காலத்தில் அரசுக்கு பென்ஷனுக்கான சந்தா தொகை செலுத்தி வந்தபோதிலும் இன்னமும் ஆயிரம் ரூபாயை குறைந்தபட்ச ஓய்வூதியமாக வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்பது குறித்துநாட்டு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஏழை எளிய சாமானியர்களுக்காக போராடி வருகிறோம் என்று சொல்லும் அரசியல்வாதிகளும் இலவசங்களுக்கு கொடுக்கும் மதிப்பில் ஒரு சிறு அளவேனும் இதில் கவனம் செலுத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர்களின் வாழ்வில் நிச்சயம் மறுமலர்ச்சி ஏற்படும்.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்க நிதி உதவி விவகாரம்... வெளிநாட்டு சக்திகளின் கருவி ராகுல்.. பாஜக பாய்ச்சல்..!