கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கும், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கும் அளவுக்கு அதிகமான போதை பழக்க வழக்கங்களே காரணமாக கூறப்படுகிறது. மது குடிப்போர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது மட்டுமன்றி, உடன் குடிக்கும் நண்பர்களையும் சில நேரம் தாக்கி காயப்படுத்துவது போன்ற சம்பவங்களும் நடக்கிறது. மது குடிப்பதற்கு என்று அழைத்து சென்று கொலை செய்வதும், மது போதையில் என்ன செய்கிறோம் என்று அறியாமலே கொலை செய்வதும் செய்திகளில் அடிக்கடி வெளியாகி வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் அருகே மதுவை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பனியன் ஆலைகள் எக்கச்சக்கமாக செயல்பட்டு வருகின்றன. அவற்றில் தமிழர்களுக்கு இணையாக வடமாநில தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான சுரேந்தர் சிங் என்பவரும், 22 வயதான விவேக்தியாகி என்பவரும் நண்பர்கள். இருவரும் அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையம் சேரன் நகர் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். வேலை இல்லாத நாட்களில் இருவரும் ஒன்றாக மதுவாங்கி அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காலில் செருப்பை போடாத அண்ணாமலை..! எகிறும் அரசியல் வேல்யூ..!

நேற்று முன்தினம் பனியன் நிறுவனத்தில் வேலை இல்லாததால் இருவரும் மாலை நேரத்தில் தங்கள் அறையில் குவாட்டர் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் மது அளவு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுரேந்தர் சிங் எப்போதும் தன்னை ஏமாற்றி அதிக மது குடிப்பதாக கூறி விவேக்தியாகி கூறி சண்டை இட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையெ வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விவேக், சுரேந்தர் சிங் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். நண்பன் இறந்தது பற்றி கவலையே இல்லாமல் மது போதையில் சுற்றித் திரிந்துள்ளார்.

வீடு திறந்திருப்பதை கண்ட அருகில் இருந்தவர்கள் உள்ளே பார்த்த போது சுரேந்தர் சிங் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருமுருகன் பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் சுரேந்தர் சிங் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அறையில் உடன் தங்கி இருந்த விவேக்தியாகியை பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் ஏற்கனவே அறையில் இருந்த தனது செல்போன் திருட்டு போனது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக விவேக் கூறியுள்ளார். இன்றும் மது அளவு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறினார். தன்னை சுரேந்தர் சிங் தொடர்ந்து ஏமாற்றி வரும் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் விவேக் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து விவேக்கை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சீட்டு விளையாடி வாழ்க்கையை அழிச்சுக்காதீங்க.. சீட்டு ஆட்டத்தில் லட்ச ரூபாய் இழந்தவர் தற்கொலை முயற்சி..!