ஒரு சீனியர் எம்.எல்.ஏ ஒருவர் குடிமகன்களுக்கு வாரத்திற்கு இரண்டு பாட்டில்கள் மதுவை இலவசமாக கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மற்றொரு எம்.எல்.ஏ பூரண மதுவிலக்குகை அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
2025-26 பட்ஜெட்டில், முதல்வர் சித்தராமையா கலால் வருவாய் இலக்கை ரூ.40,000 கோடியாக உயர்த்தியுள்ளார். இது நடப்பு நிதியாண்டின் இறுதியில் அரசு வசூலிக்க விரும்பும் ரூ.36,500- கோடியில் இருந்து அதிகரித்துள்ளது. "ஒரே ஒரு வருடத்தில், அரசு கலால் வரிகளை மூன்று முறை உயர்த்தியது. இதனால் ஏழைகள் பாதிப்படைகின்றனர். இப்போது ரூ.40,000 கோடி கலால் இலக்கு.மீண்டும் வரிகளை உயர்த்தாமல் இதை எவ்வாறு அடைவீர்கள்?" சீனியர் ஜேடி(எஸ்) எம்.எல்.ஏ எம்டி கிருஷ்ணப்பா கேள்வி எழுப்பினார்.

“மக்கள் குடிப்பதை, குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தை நாங்கள் தடுக்க முடியாது. அவர்களின் செலவில், நீங்கள் பெண்களுக்கு மாதத்திற்கு ரூ. 2,000, இலவச மின்சாரம், இலவச பேருந்து பயணம் ஆகியவற்றை வழங்குகிறீர்கள். அது எப்படியிருந்தாலும் மக்கள் பணம். எனவே, குடிப்பவர்களுக்கு, ஒவ்வொரு வாரமும் இரண்டு பாட்டில் மதுபானம் இலவசமாகக் கொடுங்கள். அவர்கள் குடிக்கட்டும். ஒவ்வொரு மாதமும் ஆண்களுக்கு பணம் எப்படி வழங்க முடியும்? ஆண்களுக்கு ஏதாவது கொடுங்கள். வாரத்திற்கு இரண்டு பாட்டில்கள். என்ன தவறு? அரசு இதை சங்கங்கள் மூலம் வழங்க முடியும்” என்று கிருஷ்ணப்பா பரிந்துரைத்தார். இதனைக் கேட்ட மற்ற எம்.எல்.ஏக்கள் சிரித்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: 'ஆண்களுக்கு வாரம் 2 மது பாட்டில்கள் இலவசமாகக் கொடுங்கள்..! சட்டசபையில் கெஞ்சிய எம்.எல்.ஏ..!

இதற்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர் கே ஜே ஜார்ஜ், “தேர்தலில் வெற்றி பெறுங்கள்... காங்கிரஸ் அரசை அமைத்து இதைச் செய்யுங்கள். மக்களைக் குறைவாகக் குடிக்க வைக்க நாங்கள் முயற்சிக்கிறோம்” எனத் தெரிவித்தார். மறுபுறம் மூத்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.பாட்டீல் மதுவிலக்கை அமல்படுத்த கோரினார்.
அவர், "இந்த கலால் வரி வருவாய்... இது பாவப் பணம். ஏழைகளிடமிருந்து உறிஞ்சப்படும் இரத்தம். இந்தப் பணத்தால் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது" என்று ஆலந்து எம்.எல்.ஏ. பாட்டீல் கூறினார். மத்திய அரசு தேசிய அளவில் மதுவிலக்கை முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். "மகாத்மா காந்தி ஒருமுறை இரண்டு மணி நேரம் சர்வாதிகாரியாக இருந்தால், முதலில் மதுவைத் தடை செய்வேன் என்று கூறினார்" என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அரவிந்த் பெல்லாட், கர்நாடகாவின் கலால் வருவாயைச் சார்ந்திருப்பது அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்தார்."குருஹா லட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,000 கிடைக்கிறது. அதன் செலவு ரூ.28,608 கோடி. ஆனால், பெண்களிடமிருந்து, கலால் வருவாயாக ரூ.36,000 கோடியை நாங்கள் வசூலிக்கிறோம். மாநிலம் மதுவை இவ்வளவு சார்ந்திருக்க வேண்டுமா? இது தொடர்ந்தால், நாம் எங்கே போவது? பீகார் போன்ற மாநிலங்கள் கலால் வருவாய் இல்லாமல் இயங்குகின்றன. குஜராத்தின் வருவாயில் கலால் வரி 0.1 சதவீதம் மட்டுமே" " என்று பாஜகவின் ஹூப்ளி-தார்வாட் (மேற்கு) எம்.எல்.ஏ. பெல்லாட் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐடி/பிடி அமைச்சர் பிரியங்க் கார்கே, ''முந்தைய பாஜக அரசாங்கமும் ரூ.35,000 கோடி கலால் வரி இலக்கை நிர்ணயித்திருந்தது. நீங்கள் மதுவிலக்குக்கு எதிராகப் போராடி இருந்தால் இதைப் பற்றிப் பேச உங்களுக்கு தார்மீக உரிமை இருந்திருக்கும். இப்போது மதுவிலக்கு கோரி ஒரு தீர்மானத்தை கொண்டு வாருங்கள். உங்களை யார் தடுப்பது? காந்தி மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நீங்கள் தன்னிச்சையாகப் பயன்படுத்த முடியாது" என்று அவர் அதிருப்தி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 22 வயது நர்ஸ் கொலை... துங்கபத்ரா நதியில் வீசப்பட்ட உடல்.. "லவ் ஜிகாத்' காரணமா..? இந்து அமைப்புகள் போராட்டம்..!