அன்புமணி தலைமை ஏற்ற பிறகு பாமகவில் இளைஞர்களின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என ஜெ குருவின் மகன் கனலரசனின் மாவீரன் மஞ்சள் படையின் மாநில அமைப்பு தலைவர் முத்துக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் மறைந்த வன்னியர் சங்க தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான காடுவெட்டி ஜெ. குருவின் மகன் கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காடுவெட்டியில் ஜெ குருவின் பிறந்தநாளையொட்டி அவரது முழு உருவ வெண்கல சிலையை அவரது தாய் கல்யாணி, சிதம்பரம் திமுக நகர செயலாளரும் நகர மன்ற தலைவருமான ஆர் செந்தில்வேலன், கடலூர் மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் கலைக்கோவன், ஆகியோர் திறந்து வைத்தனர். மாநில போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெ.குருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
\
அப்போது அப்பகுதியில் இருந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10.5 % இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவீரன் மஞ்சள் படையின் மாநில அமைப்பு தலைவர் முத்துக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவும் அவரது மகன் கனலரசனும் சமுதாயத்திற்காக தான் உழைக்கிறார்கள் ஜெ.குரு இறக்கும்போது கடனாளியாக தான் இறந்தார். மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் இறந்து போனார். பாமக அதிமுகவுடனும் திமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்டு காசு சம்பாதிக்கிறார்கள் . உண்மையிலேயே தலைவர் ஜெ குரு மீது பாசம் இருந்திருந்தால் பரங்கிப்பேட்டைக்கு வந்த அன்புமணி ராமதாஸ் காடுவெட்டிக்கு வந்து விட்டு போக வேண்டியது தானே, பசும்பொன்னிற்கு சென்று மாலை போட நிற்பவர் காடுவெட்டிக்கு வந்து மாலை போட்டு விட்டு போக வேண்டியது தானே என்றார்.
இதையும் படிங்க: ஈசிஆரில் பெண்களை மிரட்டிய திமுக குண்டர்களுக்கு போலீசார் ஆதரவா..? வெகுண்டெழுந்த அன்புமணி ராமதாஸ்..!
உண்மையிலேயே தெம்பு திராணி இருந்திருந்தால் விக்கிரவாண்டியில் 21 தியாகிகளுக்கு சிலை திறக்கும் போது அங்கு கோஷம் போட்டிருக்க வேண்டும். அன்றைக்கு குடும்பத்தோடு பயந்துகிட்டு திண்டிவனத்தை காலி பண்ணிட்டு தர்மபுரியில் போய் உட்கார்ந்து இருக்கிறார்கள் அப்பனும் மகனும். அன்புமணி தலைமை ஏற்ற பிறகு பாமகவில் இளைஞர்களின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். இவர்கள் தான் ஜெ.குருவின் சிலை திறப்பின் போது மாலை போட வந்த அமைச்சருக்கு எதிராக கோஷம் போட வைக்கிறார்கள். இது மிகவும் தவறான செயல் என குற்றச்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவுடன் கூட்டணி இருந்தபோது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டார்கள். கூட்டணி மந்திரி சபை கொடுக்க திமுக தயாராக இருந்தது. ஆனால் எந்த ஒரு எம்எல்ஏவும் மந்திரியாகிவிடக்கூடாது, தன் மகன் மட்டுமே மத்திய அமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்திலே ராமதாஸ் இருந்தார். ஆனால் இட ஒதுக்கீடு குறித்து எந்த இடத்திலும் பேசவில்லை. இவர்களுஞைய இட ஒதுக்கீடு என்பது ஒரு பொய்யான பரப்புரை. திமுகவுடன் கூட்டணியில் இருந்த போது மத்தியில் பல்வேறு பாமக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மந்திரிகளாக இருந்துள்ளனர். ஆனால் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது உயிரிழந்வர்களின் குடும்பத்திற்கு எவ்விதமான நன்மையும் செய்யவில்லை. அப்போது பாமக நினைத்திருந்தால் வீடு கட்டி கொடுத்திருக்கலாம், படிப்பதற்கு உதவி செய்து இருக்கலாம், வேலை வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இதையும் படிங்க: இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி கணிப்பு!