ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் மாவட்டத்தில் இந்த துயரம் நடந்துள்ளது. சைபர் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரை கைது செய்வதற்காக நவ்காவன் போலீஸ் நிலைய பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு போலீஸ் படை சென்றது.
தேடுதல் வேட்டையில் அந்த வீட்டில் படுத்திருந்த ஒரு பெண்ணின் அருகே அலிஸ்பா என்ற அவருடைய ஒரு மாத கைக்குழந்தை தூங்கிக் கொண்டு இருந்தது. இந்த சோதனையின் போது போலீஸ்காரர்களின் காலில் மிதிபட்ட அந்த குழந்தை உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

குழந்தையின் உடலைப் பார்த்து அந்த தாய் கதறி அழுதது காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. முன்னதாக குழந்தையை மிதித்து விடக்கூடாது என்பதற்காக அந்த தாய் போலீசாரை தடுக்க முயன்ற போது போலீசார் குழந்தையை வீட்டிலிருந்து வெளியே தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கேட்பாரற்று கிடந்த ரோடு ரோலர்.. லாவகமாக சுருட்டிய மூவர்.. மடக்கிப் பிடித்த போலீஸ்!
மேலும் சோதனைக் குழுவில் ஒருவர் கூட பெண் காவலர் கிடையாது என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த தகவல் அறிந்ததும் கிராம மக்கள் திரண்டு அங்கு வந்துவிட்டனர். ஆவேசம் அடைந்த அவர்கள் குழந்தையை கொன்ற காவலர்களை கைது செய்யும் படி ஆல்வார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இல்லத்திற்கு வெளியே கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் அதிகாரிகள் கிராம மக்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்த பிறகு அவர்கள் கலந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேஜ் பால் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போலீசார் குழந்தையை மிதித்துக் கொன்ற சம்பவத்திற்கு ராஜஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் டிக்காராம் ஜூல்லி (காங்கிரஸ்) கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆல்வார் மாவட்டத்தில் சைபர் குற்ற மோசடி என்ற பெயரில் போலீசார் மக்களை அநியாயமாக துன்புறுத்துகிறார்கள்; அதிரடி சோதனைகளை நடத்துகிறார்கள். பணம் பறிக்கிறார்கள். எந்த வகையான பயங்கரவாதம் இது? என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களா?.. தமிழக அரசுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி கேள்வி..