கரூர் மாவட்டம், நெரூர் கிராமத்தில் உள்ள சத்குரு சதாசிவம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி கோவிலில் ஆராதனை விழாவில், பக்தர்கள் உணவருந்திய பிறகு, அந்த இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.

இதனால் 2015ம் ஆண்டு முதல் இந்த நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி கோரி கரூர் நெரூரைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பக்தர்கள் உணவை உட்கொண்ட பிறகு, உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது வழிபாட்டு உரிமை எனக் கூறி, விழா நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்..10 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்.. கம்பி எண்ணும் ஒருதலைக் காதலன்..!

இந்த உத்தரவை எதிர்த்து கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, உணவருந்திய இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது என்பது மத வழிபாட்டு உரிமையாக இருந்தாலும், அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது எனவும், ஏற்கனவே உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இந்த நடைமுறைக்கு தடை விதித்துள்ள நிலையில் தனி நீதிபதி அந்த தீர்ப்புக்கு மாறாக உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், உணவருந்திய இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் வீடுகளில் ED RAID..!