கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ மனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்த ஓர் பெண் மருத்துவர் கருத்தரங்க அரங்கத்திற்குள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மிகக்கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல வன்முறை சம்பவங்களையும் நிகழ்த்தியது. மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு நாட்டின் பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டு போராட்டங்களும் வெடித்தன.

இந்த நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்குவங்க முதலமைச்சர் உரை நிகழ்த்திய போது ஆர்.ஜி.கர் மருத்துவமனை சம்பவம் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: போலி வாக்காளர்கள் மூலம் மேற்கு வங்கத்தை கைப்பற்ற பாஜக முயற்சிக்கும்- எச்சரித்த மம்தா!
பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது சில மாணவர்கள் குறுக்கிட்டு மேற்கு வங்கத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கலவரம் தொடர்பாகவும் ஆர் ஜி கர் மருத்துவமனை சம்பவம் தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பி கோஷமிட்டனர்.

அப்போது நிலைமையை சுதாரித்துக் கொண்ட மம்தா பானர்ஜி அனைவருக்கும் பொறுமையுடன் பதிலளித்து பேசினார். ஆர்.ஜி. கர் சம்பவம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பது அனைவருக்கும் தெரியுமா என்றும் இந்த வழக்கின் விசாரணை மத்திய அரசின் கைகளில் உள்ளது தங்களிடம் எதுவும் இல்லை என்றும் கூறினார். இந்த இடத்தில் அரசியல் செய்யக்கூடாது என்றும் அதற்கான இடம் இது கிடையாது, தன் மாநிலத்திற்கு வந்து தன்னுடன் அரசியல் செய்யுங்கள் எனவும் பேசினார்.

இங்கு அரசியல் செய்வதற்கு பதிலாக உங்கள் கட்சியை மேற்கு வங்கத்திற்கு சென்று பலப்படுத்தி, தங்களிடம் சண்டைகளைச் சொல்லுங்கள் என்றும் என்னை அவமதித்து உங்களுடைய கல்வி நிறுவனத்தையும் அவமதிக்காதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

தான் இப்போது ஒரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி வந்துள்ளதாகவும் உங்கள் நாட்டையும் சேர்த்து அவமதிக்காதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார். உங்களுடைய சகோதரியான நான் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன், வங்கப் புலி போல நடை போடுவேன், முடிந்தால் பிடித்து பாருங்கள் என்றும் மீண்டும் தன்னை இங்கு வருவதற்கு ஊக்குவித்து உள்ளீர்கள் எனவும் மம்தா பானர்ஜி மாணவர்கள் மத்தியில் பேசினார்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்... பாஜக ஆளும் டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!