சில சமயங்களில் நிஜ வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று விழிகளை உயர்த்த வைக்கும் கொடூரங்கள் அவ்வப்போது அரங்கேறி தான் வருகின்றன.
மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அவரது மகள்கள் அவரைத் தாக்குவதையும், அவரது மனைவி அவரை அசையவிடாமல் கட்டிப்பிடிப்பதையும் காட்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

மாநிலம் முழுவதிலும் இந்த வீடியோ காட்சிகள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து போலீசார் உடனடி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ‘புதுவிதமான மனிதநேயமற்ற தண்டனைகள்’... பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சட்டத்தை கையில் எடுக்கும் போலீஸார்..!
மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய எலக்ட்ரீஷியனான ஹரேந்திரா, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனின் தந்தை. அவர் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவார் என்று அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கூறுகின்றனர். மார்ச் 1ஆம் தேதி, அவர் தனது இரண்டு மகள்களின் திருமணத்தை நடத்தினார்.
திருமணத்திற்குப் பிறகு, அவரது மனைவி பிரிந்து செல்ல விரும்புவதாகவும், தனது தந்தையின் வீட்டிற்கு மாறுவதாகவும் கூறியதாக அறியப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஹரேந்திரா ஒரு அறையில் தன்னைப் பூட்டிக்கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டார்.

அவர் வெளியே வராததால், குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர், இந்த சமயத்தில் தான் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக ஹரேந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவரது மரணத்தைத் தொடர்ந்து, வீட்டில் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக ஹரேந்திரா தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினர் குற்றம் சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹரேந்திராவின் மனைவி அவரது கால்களைப் பிடித்துக் கொண்டிருப்பதையும், அவரது மகள்கள் அவரை ஒரு கட்டையால் அடிப்பதையும் வீடியோ காட்டுகிறது. அவர் வலியால் கதறி துடிப்பதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.

ஒரு கட்டத்தில், அவரது இளைய மகன் தனது சகோதரியைத் தடுக்க முயற்சிக்கிறான், ஆனால் அவள் அவனையும் அடிப்பதாக மிரட்டுகிறாள். அதைத்தொடர்ந்து அவரது மனைவி மீண்டும் கணவரை பிடித்துக் கொள்கிறாள், தாக்குதல் தொடர்கிறது.... இப்படி செல்கிறது அந்த வீடியோ காட்சிகள்!
இந்த வீடியோ வைரலாக, அந்த நபருக்கு நீதி கோரி சமூக ஊடக பயனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய உடல் குவாலியர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளதாகவும், பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த காவல் அதிகாரி தீபாலி சந்தோரியா தெரிவித்தார்.
"ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறுகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம், மேலும் வெளிச்சத்திற்கு வரும் அனைத்து உண்மைகளையும் நாங்கள் விசாரிப்போம்," என்று அவர் கூறினார். வீடியோவை அவர்கள் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், அவர் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: இளைஞர்களை மொட்டையடித்து ஊர்வலமாக இழுத்து சென்ற போலீஸ்... பாஜக எம்எல்ஏ கண்டனம்..!