இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும்போது, எதிர்பாராதவிதமாக ஆங்காங்கே ஏற்படும் மழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடைவது என்பது வாடிக்கையாக நடந்து கொண்டே இருக்கின்றது என சுட்டிக்காட்டினார்.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மாவட்டம், தோப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்தவெளி களத்தில் வைக்கப்பட்டதன் காரணமாக மழையில் நனைந்து சேதமடைந்ததில் தொடங்கி, இன்று வரை தொடர்ச்சியாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவது நடைபெற்றுக் கொண்டே வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: முடிவெடுப்பதில் ஆளுமை திறன் இல்லாதவர் ஓபிஎஸ்... ஆர். பி.உதயகுமார் விமர்சனம்..!

தற்போது கடலூர் மாவட்டம், புவனகிரியில் அண்மையில் பெய்த மழையால் ஆதிவராகநத்தம் பகுதியில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்ததாகவும்,நாகப்பட்டினம் மாவட்டம், வாழ்குடி, பில்லாளி, மேல பூதனூர், திருமருகல் போன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதே நிலைமை தான் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நிலவுகிறது என்று குற்றம்சாட்டியுள்ள ஓ.பன்னீர் செல்வம், நெல் கொள்முதல் நிலையங்களை உயர்த்திக் கட்டாமல் இருப்பதும், தாழ்வான இடங்களில் அமைப்பதும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் லாரிகளில் ஏற்றி அனுப்பாததும்தான் நெல் மூட்டைகள் சேதமடைந்ததற்குக் காரணம் என தெரிவித்தார்.
தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு என்றும் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கிற்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாவும் கூறியுள்ளார்.

இனி வருங்காலங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், கூடுதலாகக் கிடங்குகள் கட்டவும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: எதிர்கட்சியா இருந்தப்ப நடந்ததை எல்லாம் முதல்வர் மறந்துட்டாரு போல... விளாசிய ஓபிஎஸ்..!