இன்றும், நாளையும் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஏஐ உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கும் மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து உரையாற்ற உள்ளார்.
2047-ல் இந்தியா - பிரான்ஸ் இடையே சில இலக்குகளை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை துரிதப்படுத்துவது, இருநாட்டு வர்த்தகத்தில் கூடுதல் இணக்கத்தை ஏற்படுத்துவது இந்த சந்திப்பின் அடிநாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மார்செய்லே நகரத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும், அங்கு செயல்பட்டு வரும் சர்வதேச வெப்ப அணுக்கரு உலையினை இரண்டு தலைவர்களும் பார்வையிட உள்ளனர்.
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் நாளை புனித நீராடும் பிரதமர் நரேந்திர மோடி...

நீடித்த மற்றும் நிலையான ஆற்றலை அதாவது புதுப்பித்தக்க எரிசக்தியை நடைமுறைப்படுத்துவதற்கான சர்வதேச அமைப்பில் இந்தியாவும், பிரான்சும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் பங்கேற்று உயிர்த்தியாகம் புரிந்த இந்தியர்களுக்காக பிரான்சின் மஜார்குவெஸ் நகரில் போர்நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. மார்செய்லே நகரத்தைத் தொடர்ந்து மஜார்குவெஸ் நகர போர் நினைவுச் சின்னத்திற்கு சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த உள்ளார்.
பின்னர் 3 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு நாள் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையே நிலவும் நல்லுறவை அதிகப்படுத்தும் விதமாக இந்த பயணம் அமையும் என்று எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கையில் விலங்கிட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அதுபற்றியும் இந்த சந்திப்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; மரத்தடியில் மாணவிகளுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்த பிரதமர் மோடி