மூன்றுநாள் இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலத்தை அவர் திறந்து வைத்தார்.
கடந்த 2-ந் தேதி முதல் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதலில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் நேற்று முன்தினம் இலங்கைத் தலைநகர் கொழும்பு சென்றடைந்தார். நேற்று சுதந்திர சதுக்கத்தில் அதிபர் அனுரகுமார திசநாயகேவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது இருதரப்பு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மீண்டும் ஒப்படைக்கக் கோரியும் அதிபர் அனுரகுமார திசநாயகேவிடம், பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இன்றுகாலை அநுராதபுரத்தில் உள்ள ஜெய ஸ்ரீ மகா போதி ஆலயத்திற்கு அதிபர் திசாநாயகவுடன் பிரதமர் மோடி..சென்றார். அங்கு மூத்த பௌத்த துறவிகளிடம் மோடி ஆசிபெற்றார். பின்னர் அனுராதபுரத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் அருகிலுள்ள மண்டபம் பகுதிக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசின் பிரதிநிதியாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இதையும் படிங்க: பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி..! காங்கிரசார் குண்டுகட்டாக கைது..!

மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிரதமர் வருகையையொட்டி 6 ஆயிரம் போலீசார் ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் நோக்கி பிரதமர் காரில் வருகை தந்தார். வழிநெடுகிலும் சாலையின் இருபுறத்திலும் ஏராளமானோர் திரண்டு நின்று பூக்களைத் தூவி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பதிலுக்கு பிரதமரும் காரில் இருந்தபடியே மக்களை நோக்கி கையசைத்து புன்னகைத்தார்.பாம்பன் சாலை பாலத்தின் மீது தற்காலிக மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன்மீது நின்றவாறு 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

17 மீட்டர் உயரம் வரை தூக்கப்படும் திறன் கொண்டது இந்த செங்குத்து தூக்குப் பாலம். பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைத்த கையோடு, தூக்குபாலம் உயர்த்தப்பட்டு கடலோர காவல்படையின் கப்பல் கடந்து சென்றதை அவர் பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பாம்பன் ரயில் பாலத்தின் மினியேச்சரை நினைவுப்பரிசாக வழங்கினார். நிகழ்ச்சி முழுவதும் பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய முறையில் பட்டு வேட்டி, சட்டையில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாம்பன் புதிய ரயில் பாலம் இன்று திறப்பு.. இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.!