போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்யாதது குறித்து சென்னை உயர் நீதிமன்றம், கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில், போக்சோ உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து உடனடியாக மேல் முறையீடு செய்வது தொடர்பாக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்திற்கான போக்சோ வழக்குகளில், விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என சட்ட ஆலோசனைப் பெற்று, தாமதமின்றி மேல் முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, விசாரணை அதிகாரிகளுக்கும், சிறப்பு அரசு வழக்கறிஞர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் கேட்டு கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை மொத்தம் 21,672 வழக்குகள் போக்சோ சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு 20,303 வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வந்த நிலையில் அவற்றில் 2023 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். 30 சதவித வழக்குகளில் அதாவது 6110 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர 12 ஆயிரத்து 170 வழக்குகள், அதாவது 60 சதவித வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல் நீதிமன்றங்களில் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றில் பல வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அங்க, இங்க கை வைப்பாரு.. மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர்.. இங்கிலீஷ் வாத்தியார் போக்சோவில் கைது..
போக்சோ சட்டத்தின்படி பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஓராண்டுக்குள் அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் போதிய எண்ணிக்கையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படாததும், புலன் விசாரணைகள் சரியாக மேற்கொள்ளப்படாததும் தான்.

எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் 100-க்கும் கூடுதலான போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளனவோ, அங்கெல்லாம் ஒரு போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்; 300-க்கும் கூடுதலான போக்சோ வழக்குகள் நிலுவையில் இருந்தால், அங்கு இரு சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன; 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் குறைந்தது 53 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இன்று வரை 20 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் மட்டும் தான் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கன்னி பெண்ணுடன் உறவு வைத்தால் ஆயுள் கூடும்? ஜோசியத்தை நம்பி சிறுமியை சீரழித்த தம்பதி.. 20 வருஷம் ஜெயில்..!