கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை மதகுருவான போப் ஆண்டவர் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக ரோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. காதலர் தினமான நேற்று மூச்சுக்குழாய் அழற்சிக்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக ரோமில் உள்ள ஜெமலி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார்.

88 வயதான அவர் கடந்த சில நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். தனது வழக்கமான உரைகளைப் படிப்பதற்கு கூட அதிகாரிகளை நியமித்து இருந்தார். நேற்றைய காலை கூட்டங்களுக்கு பிறகு அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை வத்திகான் அரண்மனை அறிவித்து உள்ளது. சில தேவையான நோய்கள் சோதனைக்காகவும், தொடர்ந்து மருத்துவமனை சூழலில் மூச்சுக்குழாய் தொற்று சிகிச்சையை தொடரவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு மசோதா: இந்தியா சந்திக்கும் சவால்கள் என்ன?

அதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை போப் ஆண்டவர் கலந்து கொள்ள இருந்த இரண்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று போப் ஆண்டவரின் இடத்தில் கார்டினல் ஒருவர் திருப்பலி பூஜையை நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று மாலை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் ஆரம்பகட்ட பரிசோதனைகள் சுவாச குழாய் தொற்று இருப்பதை காட்டுகின்றன என்றும் அவருடைய உடல்நிலை லேசான காய்ச்சலுடன் சீராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"போப் அமைதியாக இருக்கிறார். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். செய்தித்தாள்களை படித்து வருகிறார்" என்று வத்திகான் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த 2013 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ் போப் ஆண்டவராக பொறுப்பேற்றார். ஜெமலியில் போப்களால் பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் ஒரு அறையில் போப் பிரான்சிஸ் தங்குவார். அங்கு அவருக்காக தனி தேவாலயம் உள்ளது.

மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள போப் இரண்டாம் ஜான் பால் சிலையின் அடிப்பகுதியில் படம் தாங்கிய மெழுகுவர்த்தியை அவருடைய நலம் விரும்பி ஒருவர் வைத்துவிட்டு சென்றிருக்கிறார். பல வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த போப் ஆண்டவர் குணமடையாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் பல நாட்கள் மருத்துவமனையில் இருக்கக்கூடும் என்றும் இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இளம் வயதிலேயே நுரையீரலின் ஒரு பகுதியை பிரான்சிஸ் அகற்றிக் கொண்டார்.

சமீபகாலமாக தன்னுடைய உரைகளை உரக்க வாசிக்குமாறு உதவியாளர்களிடம் பலமுறை கேட்டுக்கொண்டார். தனது சொந்த உரைகளை இன்னும் படிக்க முடியவில்லை என்று ஒருநாள் கூறினார். பின்னர் ஒரு புன்னகையுடன் "அடுத்த முறை என்னால் முடியும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டார். அவர் குணம் அடைவதற்காக கடந்த வாரம் வீட்டிலேயே கூட்டங்களையும் நடத்தினார். போப் ஆண்டவர் ஒருபோதும் விடுமுறை எடுப்பதில்லை. எப்போதும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தவெகவுக்கு வந்த சோதனை… சென்னைக்கு வெளியே அனுப்பப்பட்ட நிர்வாகிகள்… குழப்பத்தில் விஜய்..!