பாஜக கூட்டணியில் இணைய முடிவெடுத்திருக்கும் சரத் பவார் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 'மகாராஷ்டிரா அரசியலி'ல் ஏற்பட்டுள்ள பரபரப்பான இந்தத் திருப்பம் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சமீபத்தில் நடந்த முடிந்த மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணியுடன் இணைந்து "மகா விகாஸ் அகாடி" கூட்டணியில் போட்டியிட்ட சரத் பவார் அணி, 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சுவாரஸ்யங்கள்... முந்தி கொண்ட காங்கிரஸ்... கோபத்தில் திமுக.... யோசிக்கும் அதிமுக..
இந்த நிலையில், சரத் பவார் அணியில் இருந்து 8 எம்பிக்கள் அஜித் பவார் அணியில் விரைவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாஜக கூட்டணியின் ஆதரவு எம்பிக்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டி விடும்.

மேலும், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் இணைய சரத் பவார் தயாராக இருப்பதாகவும், அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி பெற முயற்சித்து வருவதாகவும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வரை பாராட்டிய சரத் பவார் மகள்
கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, மகாராஷ்டிர முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவீஸை பாராட்டினார்.
“மகாயுதி அமைச்சரவையில் பெரும்பாலான அமைச்சர்கள் இன்னும் பொறுப்பேற்கவில்லை. மிகவும் கடினமாக உழைப்பது வேறு யாரும் இல்லை, தேவேந்திர பட்னவீஸ் ஒருவர் மட்டும்தான்” என அவர் புகழாரம் சூட்டி இருந்தார்.
சுப்ரியா சுலே பாராட்டு தெரிவித்து ஒரு வாரத்துக்குள் சரத் பவார் அணி கூட்டணி மாற்றம் குறித்த பரபரப்பான செய்திகள் மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கெனவே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போர்க் கொடி தூக்கியுள்ள நிலையில், சரத் பவாரும் அணி மாறினால் காங்கிரஸ் தலைமையிலானஇந்தியா கூட்டணி மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளது. இந்த புதிய திருப்பம் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சரத் பவாருடன் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்க முயற்சித்த பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார், தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உடைந்ததைத் தொடர்ந்து அஜித் பவாரின் பிரிவு தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருந்தது. அதைத் தொடர்ந்து அஜித் பவர் பிரிவுக்கு தேர்தல் சின்னம் மற்றும் பெயர் வழங்கப்பட்டது நினைவு இருக்கலாம்.
மூத்த அரசியல் தலைவரான சரத் பவாரின் அரசியல் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது. இறுதியாக மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, மகள் சுப்ரியா சுலேவின் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதற்காக இந்த முடிவுக்கு சரத் பவர் வந்திருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
இதையும் படிங்க: ரொம்ப ஓவரா போறீங்க ..பிரிவினைவாதத்தை தூண்டுவது யார் ? திமுகவை வறுத்தெடுத்த தமிழிசை..!