சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது .
முதல் தகவல் அறிக்கை வெளியாக காரணமாக இருந்த அதிகாரிகளிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை வசூலித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த போலீஸ் கமிஷனர் அருண் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவுக்கு இடைக்காலை தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் பலாத்காரம்... அதிகாரிகளிடம் இருந்து ரூ.25லட்சம் வசூலித்து கொடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு புலன் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. பாதிக்கப்பட்ட மாணவின் கண்ணியம் காக்கப்படவில்லை.
சென்னை போலீஸ் கமிஷனர் (காவல் ஆணையர்) மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
மேலும் "பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கவும், கல்வி கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் மாணவியிடம்வசூலிக்க கூடாது" என்றும், அவரை தொடர்ந்து படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
பாலியல் பலாத்கார வழக்கையும் முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு திறனாய்வு குழுவை அமைத்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும் விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் இருந்த போது அரசின் அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பு நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகளின் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை ( எஃப் ஐ ஆர்) வெளியான விவகாரத்தில் காவல்துறை மீது தவறு இல்லை என்று, உயர் நீதிமன்றத்தின் கருத்துகளை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு முறையீடு செய்திருந்தது.
இந்த முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, " அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்த முதல் தகவல் அறிக்கை ஆவணம் எவ்வளவு நேரத்தில் பதிவிறக்கம் (டவுன்லோட் )செய்யும் வகையில் இருந்தது? மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார்? என்றும் கேள்வி எழுப்பியது.
தொடர்ந்து "பாதிக்கப்பட்ட மாணவியின் விவரம் எவ்வாறு வெளியானது?" என தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்யப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது!' என்றும் கேட்டனர்.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாக காரணமாக இருந்த அதிகாரிகளிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை வசூலித்து மாணவிக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் இந்த வடக்கு விசாரணை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.
அத்துடன் "மாணவியின் செயல்தான் குற்றம் நடக்க காரணம் என்பதுபோல் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு உள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கை கசிந்ததால் (லீக்) மாணவி மீது குற்றம் சொல்லக் கூடிய கொடுமை நிகழ்ந்து உள்ளதாகவும்" நீதிபதிகள் அப்போது கருத்து தெரிவித்து உள்ளனர்.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையின்போது, "பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்" என தமிழக அரசு தரப்பில் உறுதி வழங்கப்பட்டது.
அதே நேரத்தில், வழக்கை சிறப்பு புலனாய்வு குழு தொடர்ந்து விசாரிக்க எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவில் நீதிபதிகள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: வலிப்பு நாடகம் ஆடிய ஞானசேகரன் - உண்மையை கண்டுபிடித்த மருத்துவர்கள்