தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதிமுக சார்பில் சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். "வீரபாண்டியில் நடைபெறும் இந்தப் பொங்கல் விழாவில் நானும் ஒரு விவசாயியாக பங்கேற்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆண்டு 2026 பிறக்கிறது. 2026 தைத் திருநாள் என்பது தீய சக்தி திமுகவை வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும். அதற்கு 2025ஆம் ஆண்டு நமக்கு முன்னோட்டமாக அமையும்.
நான் விவசாயி என்பதால், விவசாயிகளின் துன்பத்தை அறிந்தவன். அதனால் அதை உணர்ந்து விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை தந்தோம். அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 5 ஆண்டு காலம் மத்திய அரசின் க்ரிஷ் கர்மான் விருதை பெற்றோம். ஆனால், பொய்யான், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்து, கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்த திமுக கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்காக எதுவுமே செய்யவில்லை. திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்களுடைய குடும்பத்தினருக்குதான் நன்மை கிடைத்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட அதிமுக ஆட்சியில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் ஏக்கரில் பிரம்மாண்டமான கால்நடை பூங்கா ஏற்படுத்திக் கொடுத்தோம். அதனால் அதிமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால், மூன்றரை ஆண்டுகள் ஆகியும் அதை திமுக அரசு திறக்கவில்லை. இதைப் பற்றி இன்றைய தினம் நான் கேள்வி எழுப்புவேன் என்ற காரணத்துக்காக நேற்றைய தினம் திறந்து உள்ளனர். கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். இதன் காரணமாக 3,160 பேர் மருத்துவம், பல் மருத்துவம் படிக்கின்றனர்.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அடுத்த அதிரடி; இறுதிச்சுற்றில் ஆட்சியர் போட்ட திடீர் உத்தரவு!
அதிமுக ஆட்சிதான் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் விலை இல்லாமல் வழங்கியது. இவை அனைத்தையும் திமுக அரசு முடக்கியது. இப்போதுள்ள மகிழ்ச்சியோடு நாம் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை அரியணையில் அமர்த்த வேண்டும். அதற்காக விவசாயிகள், பொதுமக்கள் என எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதல்வர் போட்ட அன்புக்கட்டளை; கெத்து காட்டிய தமிழக பெண்கள்!