பிரதமர் மோடி பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்துவிட்டு நேற்று அமெரிக்காவுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் புதிய உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்டை சந்தித்து நேற்று பிரதமர் மோடி பேசினார். புதிதாக பதவியேற்றுள்ள துள்சி கப்பார்டுக்கு வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதன்பின், வெள்ளை மாளிகையில் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்துப் பிரதமர் மோடி பேசினார், அதுமட்டுமல்லாமல் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கையும் சந்தித்துப் பேசியுள்ளார். அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மோடி இடையிலான சந்திப்பில் பல்வேறு விதமான விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பரஸ்பர மேம்பாடு, சர்வதேச நிலவரம் குறித்தும் பேசப்பட்டது.

இது தவிர அமெரிக்க அரசின் முக்கிய அதிகாரிகள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ், தேசிய உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்ட் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். தொழிலதிபர்கள் எலான் மஸ்க், இந்திய அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமியுடனும் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் முக்கிய அம்சங்கள்

இதையும் படிங்க: ரஷ்யா-உக்ரைன் போரில் நடுநிலை இல்லை.. சமாதானம் மட்டுமே..! மோடியின் பதிலால் ஆடிப்போன ட்ரம்ப்..!
போர் ஜெட் விமானங்கள் கொள்முதல்: இந்தியாவுக்கு எப்-35 ரக ஜெட் போர் விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் இடையே கையொப்பமானது. அமெரிக்க ராணுவத்தில் அதிநவீன போர்விமானமான எப்-35 ஜெட் விமானம், இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும்.

ராணுவ கூட்டுறவு: இந்திய ராணுவம்-அமெரிக்க ராணுவத்துக்கு இடையே 10 ஆண்டுகள் கூட்டுறவு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இதன்படி அமெரிக்கா தன்னுடைய பாதுகாப்பு தளவாடங்கள் விற்பனை, தயாரிப்புகளை இந்தியாவுடன் இணைந்து செயல்படுதல், கூட்டுறவு செயல்படுதல் அடங்கும். பாதுகாப்பு தளவாடங்கள் விற்பனை, தொழில்நுட்ப பரிமாற்றம், பராமரிப்பு, உதரிபாகங்கள் சப்ளை, பழுதுநீக்குதல் ஆகியவற்றுக்கு இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளித்தல்.

தீவிரவாதி தஹவூர் ராணா நாடு கடத்தல்: மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு, தீவிரவாதிகள் தாக்குதலில் மூளையாக இருந்த பாகிஸ்தான் தீவிரவாதி தஹவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடுகடத்த அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் தஹவூர் ராணாவை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் இந்தியாவின் முயற்சிக்கு அதிபர் ட்ரம்ப் உதவியுள்ளார்.
தஹவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கடந்த மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துவிட்டது. இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் பேச்சு நடத்தி வந்தநிலையில் பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் சந்திப்பில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மிஷன் 500: 2030ம் ஆண்டுக்குள் இந்தியா-அமெரிக்கா இடையே 50000 கோடி டாலர்களுக்கு வர்த்தகம் நடைபெற அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. பரஸ்பர வரிவிதிப்பு இந்தியா மீது இருக்கும் என அதிபர் ட்ரம்ப் கூறிநிலையில் இந்த வர்த்தக ஒப்பந்தம் இரு தலைவர்களுக்கும் இடையே கையொப்பமானது.

எரிசக்தி பாதுகாப்பு: அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்துள்ளார். சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பில் இந்தியாவை முழுநேர உறுப்பினராகச் சேர்வதற்கு அமெரிக்கா ஒத்துழைக்கும் என அதிபர் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

சட்டவிரோத இந்தியர்கள் விவகாரம்: அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துக் கொள்ள பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்துள்ளார். அதேசமயம், ஆட்கடத்தலைத்தடுக்கவும், அதன் ஆனிவேரைக் கண்டறிந்து அழிக்கவும் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து இரட்டை பட்டப்படிப்பு, முதுநிலைப் படிப்புகளை தொடரவும் இந்தியா ஆர்வமாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போதைப் பொருட்கள் கடத்தல், ஆயுதக் கடத்தல், சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இருநாடுகளின் அதிகாரிகளும் பரஸ்பர தகவல்களை பரிமாறி செயல்படுதல்.

அமைதியின் பக்கம் இந்தியா: ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு நடுநிலை அல்ல என்றும், அமைதியின் பக்கம்தான் இந்தியா இருக்கிறது என பிரதமர் மோடி தெளிவாகத் தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் தலைவர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பில்கூட போருக்கான காலம் இதுவல்ல என்று வலியுறுத்தியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குவாட் மாநாட்டுக்கு அழைப்பு: இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா கூட்டாக அமைத்துள்ள குவாட்(QUAD) மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

எலான் மஸ்க்-பிரதமர் மோடி சந்திப்பு: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்குடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். எலான் மஸ்கின் குழந்தைகளுக்கு இந்தியாவின் சார்பில் ரவீந்திரநாத் தாகூர் கவிதைகள், ஆர்கே நாராயண் கதைகள், பஞ்சதந்திர கதைகள் புத்தகங்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். விண்வெளி, போக்குவரத்து, தொழில்நுட்பம், புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை குறித்து எலான் மஸ்க்குடன் நடந்த சந்திப்பில் பிரதமர் மோடி ஆலோசித்துள்ளார்.
இதையும் படிங்க: குழந்தை குட்டிகளோடு மோடியை பார்த்த எலான் மஸ்க்..! விரைவில் இந்தியாவில் டெஸ்லா