''கட்டாய பாடமாக மூன்றாவது மொழியை கொண்டு வருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு முதலமைச்சரின் நிலைப்பாட்டை நான் முழுமையாக ஆதரிக்கின்றேன்'' என சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மூன்றாவது மொழி என்று சொல்லும்போது, அதை மறைமுகமான இந்தி திணிப்பாகத்தான் நான் பார்க்கிறேன். எந்த காலத்தில் தமிழ்நாட்டில் அதனை அனுமதிக்க கூடாது இது.இது நமது கலாச்சாரத்தின் மீது நடக்கும் தாக்குதல். ஒரு மொழியை அழிக்க வேண்டும், கலாச்சாரத்தை அளிக்க வேண்டும் என்றால் இந்த வழியில்தான் அளிக்க முடியும். அதனால் தமிழ்நாட்டிற்கு கட்டாயம் மூன்றாவது மொழி தேவை கிடையாது.

மக்கள் தொகை அடிப்படையில் இருக்கும் 543 தொகுதிகளை வைத்தே நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்தாலும் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை 848 ஆக உயர்த்தினாலும், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிப்படையும். தற்போது இருக்கும் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கே உரிய நேரம் கிடைப்பதில்லை.
இதையும் படிங்க: வித்தியாசம் தெரியாத பாதரசம் - விஜயை வெளுத்து வாங்கிய கருணாஸ்...!
848 ஆக உயர்த்தினால் மொத்தமாக அவர்களது கருத்தை கூறமுடியாத நிலையே ஏற்படும். அதனால் தற்போது இருக்கும் நிலையே தொடர்வது தான் நல்லது. நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் குறைவதை ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.
பாசிசம், பாயாசம் என்று பேசுவது அரசியலா? இதுபோன்ற பஞ்ச் டயலாக்குக்கு விளக்கம் அளிக்க முடியாது. அரசியல் என்பது ஒரு சீரியஸான விஷயம். ஒரு நிலைப்பாட்டை சொல்ல வேண்டும். எந்தெந்த விஷயத்தில் ஒத்துப் போகிறீர்கள், எந்தெந்த விஷயத்திற்கு மாறுபடுகிறீர்கள்?

ஆட்சிக்கு வந்தால் தற்போது இருப்பதில் என்ன மாறுதல் செய்வீர்கள் என்பதை உள்ளிட்டவற்றை எடுத்து சொல்லித் தான் மக்களை சந்திக்க வேண்டுமே தவிர, பஞ்ச் டயலாக்குகளை வைத்து நிச்சயம் எடைபோட முடியாது. இது மேடைக்கும், மீம்ஸ் போடுவதற்கும் வேண்டுமென்றால் நன்றாக இருக்கும்'' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ”வாட் ப்ரோ, ஒய் ப்ரோ” என விஜய்யை கிண்டலடித்த சரத்குமார்!!