நடிகர் விஜய் அரசியலில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ரகசிய வியூகம் இருக்கத்தான் செய்கிறது. அப்படித்தான் இப்போது நடத்தும் நோன்பு நிகழ்ச்சியும் அமைந்துள்ளது. தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நோன்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் கலந்து கொள்ள இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளும் படு மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் விஜயின் அரசியல் குறித்து இஃப்தார் நிகழ்ச்சி செல்லும் அரசியல் விவாதமும் எழுந்திருக்கிறது. திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்து, விமர்சித்து வரும் விஜய், திமுகவில் வாக்கு வங்கியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். அந்த வகையில் திமுகவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவதே சிறுபான்மை சமூக வாக்கு வங்கிதான்.
இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களின் வாக்குகளுக்கும் திமுகதான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் சிறுபான்மையினரும் தன் பக்கம் இருக்க வேண்டும் என திட்டம் போடும் விஜய், தனது முதல் மாநாட்டிலே இஸ்லாமிய பெண் நிர்வாகியை மேடைக்கு அழைத்து இருக்கையில் அமர வைத்து கௌரவப்படுத்தினார். அதற்கு முன்பு பனையூரில் நடந்த தவெக அறிமுக நிகழ்வில் கூட பாஹீரதா நன்றி உரையாற்றினார். இந்த வரிசையில் தற்போது இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார்.
இதையும் படிங்க: அதிமுகவுக்குள் ஆட்டம் காட்டும் விஜய்..! தங்கமணி- எஸ்.பி.வேலுமணியுடன் மோதும் எடப்பாடியார்..!

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோது ஓரிருமுறை இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், தற்போது அரசியல்வாதியான பிறகு முதல் முறையாக நோன்பில் கலந்து கொள்கிறார்.விஜய் கடந்த காலங்களில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் படங்களில் நடித்ததும் விமர்சனத்தில் முன் வைக்கப்படுகிறது. குறிப்பாக 2012 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தில், விஜய் ராணுவ வீரராக நடித்திருந்தார்.

படம் முழுவதும் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக துப்பாக்கி திரைப்படம் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. படம் ரிலீஸ் ஆன பிறகு இஸ்லாமிய அமைப்புகள் விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்தினர். வேறு வழியில்லாமல் விஜயும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் அப்போதைய தமிழக அரசிடமும், இஸ்லாமிய அமைப்பினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே பிரச்சனை ஓய்ந்தது. திரைப்படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு காரணமாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக பிரச்சினையை முடித்தாலும், வெளிப்படையாக விஜய் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

2022 ஆம் ஆண்டு வெளியான பீட்ஸ் திரைப்படத்திலும் அதே போல இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் திரைப்படத்தில் நடித்திருந்தார் விஜய். ஒரு முறை எதிர்ப்பு கிளம்பிய பிறகும் கூட, முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கும்போது மீண்டும் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் விஜயை கடுமையாக விமர்சித்து பதிவுகளும் வெளியிடப்பட்டன. திரைப்படத்திற்கு எதிராக பல இஸ்லாமிய அமைப்புகள் போர்க் கொடி தூக்கினாலும் விஜய் அதை கண்டு கொள்ளவில்லை.

முன்னணி நடிகராக இருந்தபோது இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் திரைப்படங்களில் நடித்துவிட்டு, அரசியல்வாதியான பிறகு சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக விஜய் நிகழ்ச்சி நடத்துவதாக பார்க்கப்படுகிறது. நடிகராக இருந்தபோது இல்லாத சமூக அக்கறை, அரசியல்வாதியான பிறகு மட்டும் வாக்குக்காக வந்துவிட்டதா? என விமர்சிக்கப்படுகிறது.

அண்மையில் பாஜகவின் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு இஸ்லாமியர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த சட்ட திருத்தம் குறித்துகூட விஜய் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கையில் தற்போது மட்டும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவதாக விஜய் கிளம்பி இருப்பது எப்படி நியாயமாகும்? என்கிற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.
கடந்த சில தேர்தல்களில் சிறுபான்மையினரின் வாக்குகள் அப்படியே திமுகவிற்கு கிடைத்து வரும் நிலையில், அந்த வாக்கு வங்கியை பிரித்து தன் பக்கம் இழுக்க நினைக்கும் விஜயின் யுக்தி கை கொடுக்குமா? என்பது போகப் போகத்தான் தெரியும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் வசித்து வரும் நிலையில் சிறுபான்மையினரின் வாக்குகள் தேர்தல் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏற்கனவே சிறுபான்மை சமூக மக்களை வெறும் தேர்தல் அரசியல்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக சில கட்சிகள் மீது விமர்சனம் முன்வைக்கப்படும் நிலையில், அந்த வரிசையில் விஜயும் இணையாமல் இருப்பது தான் அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: வாட் ப்ரோ...இது ராங்க் ப்ரோ... விஜய்யை கலாய்த்த ப்ளூ சாட்டை மாறன்!!