ஆளுநர் மோதலை பீஹார் வரை சபாநாயகர் கொண்டுச் சென்றது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சபாநாயகராக பொறுப்பேற்ற அப்பாவு, சபாநாயகருக்கு உரிய மரபை மீறி பல கருத்துக்களை தெரிவித்து வருவதாக விமர்சனம் வைக்கப்படுகிறது. தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் குறுக்கீடு செய்கிறார், சமயத்தில் அமைச்சர்கள் பேச்சுக்கே இவரால் பல குறுக்கீடுகள் வருகின்றனர் என்று விமர்சனம் உண்டு.

சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து அதை கோரிக்கையாகவும் வைத்து ஆட்சிக்கு வந்த திமுக முன்னிலும் மோசமாக எதிர்க்கட்சியினரை காட்சிகளில் கூட காண்பிப்பது இல்லை எதிர்க்கட்சிகள் பேசும் பொழுது குறிப்பாக எடப்பாடி பழனிசாமி பேசும்பொழுது நேரலையை துண்டிப்பது நடப்பதாக அதிமுக பலமுறை குற்றஞ்சாட்டி உள்ளது.
இதையும் படிங்க: அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஈகோ..கவுண்டர் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்..!
அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டால், முதல்வருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டாலும் உடனடியாக நேரலையை துண்டித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பேசுவதை மட்டும் காண்பிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் சபாநாயகர் தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும், ஆனால் அவர் தலையிடுவது இல்லை என்று எதிர்க்கட்சிகள் தரப்பு குற்றச்சாட்டாக உள்ளது.

தமிழக சட்டசபையில் பல விஷயங்களில், மானிய கோரிக்கைகள் மீது உறுப்பினர்களுக்கான விவாத நேரங்கள் மிகவும் குறைக்கப்படுவதாக பண்ருட்டி வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்களே குற்றச்சாட்டும் நிகழ்வும் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாகவே சட்டசபை தொடக்க நிகழ்வில் ஆண்டுதோறும் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறதும் இந்த விவகாரத்தில் இந்த பிரச்சனையை சமூகமாக தீர்த்து முடிவு கொண்டு வர வேண்டியது சபாநாயகர் அப்பாவுவின் பொறுப்பு.
ஆனால் அவர் இந்த விவகாரத்தில் அவர் பாராமுகமாகவே இருந்து வருகிறார், ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள், ஆளுநர் உரையை ஆளுநர் புறக்கணித்து வெளிநடப்பு செய்வது மூன்றாவது முறையாக நடந்து வருகிறது. ஆளுநரை சட்டசபை தொடங்குவதற்கு முன் மரபு ரீதியாக சந்திக்கும் சபாநாயகர் இந்த முறை ஆளுநரிடம் விரிவாக பேசி இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் மரபுப்படி ஆளுநரை சந்தித்து பேசிவிட்டு சபாநாயகர் வந்த பின்னரும் இந்த ஆண்டும் தேசிய கீதத்தை காரணமாக வைத்து ஆளுநர் வெளிநடப்பு செய்திருப்பது ஆளுநர் சபாநாயகர் சந்திப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதையே காட்டுவதாக அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்தது.

அதேபோன்று ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டசபையை நடத்துவதாக வாக்களித்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் மிக குறைவான அளவில் 119 நாட்கள் மட்டுமே சட்டசபை நடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 30க்கும் குறைவான நாட்களே சபை நடந்துள்ளது. வாக்களித்தப்படி ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்றத்தை நடத்தாததால் மக்கள் பிரச்சனைகளை சபையில் பேசுவதற்கான வாய்ப்பே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கவில்லை.
ஆளுநருடனான மோதலை முடிவுக்கு கொண்டு வராதது, சட்டசபை நேரலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது துண்டிக்கப்படுவது, குறைவான நாட்கள் மட்டுமே சட்டசபை கூடியது அனைத்தையும் அரசு செய்திருந்தாலும் சபாநாயகர் முன் முயற்சி எடுத்து இதை நீக்கும் நடவடிக்கையை செய்திருக்கலாம் என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் 75வது ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து பாட்னாவில் நடைபெற்ற இரண்டு நாள் 85வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் மாநில சட்டமன்ற சபாநாயகர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள் கலந்துக்கொண்டனர். இதில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டியும் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையேற்று நடத்தினார். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர். மாநாட்டில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எவ்வாறு வலுவாக்குவது என்பது குறித்து விவாதம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய சபாநாயகர் அப்பாவு ஆளுநர் குறித்து விமர்சனங்களை வைத்ததாக கூறப்படுகிறது.
'அரசியலமைப்பின் 75வது ஆண்டு நிறைவு: அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்துவதில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில் சபாநாயகர் உரை நிகழ்த்தியுள்ளார். அவரது உரையில், ஆளுநர்கள் தங்கள் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அப்பால் மாநில நிர்வாக விஷயங்களில் தலையிட்டு அதன் மூலம் அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவது குறித்தும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கைகளை குறிப்பிட்டும் அவர் விமர்சித்துள்ளார்.
”எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தை மீறி செயல்படுவது, மாநில பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் தலையிடுவது போன்றவை அதிகரித்து வருகிறது, என்று கவலை தெரிவித்த அப்பாவு, ராஜமன்னார், சர்க்காரியா, புஞ்சி மற்றும் வெங்கடாச்சலியா உள்ளிட்ட மத்திய-மாநில உறவுகள் குறித்த பல்வேறு ஆணையங்களின் பரிந்துரைகளை உதாரணம் காட்டி பேசியுள்ளார்.

மேலும் ஆளுநர்களை நியமிப்பதில் அந்தந்த மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என தனது பரிந்துரையை வைத்தார். கூட்டாட்சி முறை நீர்த்துப்போகச் செய்யப்பட்டு வருவதாகவும், மத்திய அரசு மாநில அரசுகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் கூறினார். நவம்பர் 25, 1949 அன்று நடந்த அரசியலமைப்புச் சபை விவாதங்களின்படி, மாநிலங்கள் தங்கள் சட்டமன்ற அல்லது நிர்வாக அதிகாரத்திற்காக எந்த வகையிலும் மையத்தைச் சார்ந்திருக்கவில்லை. இந்த விஷயத்தில் மையமும் மாநிலங்களும் சமமானவை, ” என்று அப்பாவு கூறினார்.
தொடர்ந்து பேசிய அப்பாவு, மாநில அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட உரையை சட்டமன்றத்தில் தவிர்ப்பது, வெளிநடப்பு உட்பட பல்வேறு விஷயங்களை சபாநாயகர் அப்பாவு பேசியபோது. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் குறுக்கிட்டு தலைப்பின் மீது பேச சொல்லி தனது கருத்துக்களை எதிர்த்தபோது, அப்பாவு, "தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்பிற்கு எதிராக செயல்படுகிறார். இதைப் பற்றி நான் இங்கே பேச முடியாவிட்டால், வேறு எங்கு பேச முடியும்?" என்று கேட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் குறித்து அப்பாவு தனது உரையில் தெரிவித்த சில கருத்துகளுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தமிழக சபாநாயகர் அப்பாவு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து இந்த மாநாட்டில் அப்பாவு பேசியது நிகழ்ச்சி குறிப்பில் பதிவாகாது என ஹரிவன்ஷ் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் சபை மரபுகளை மீறுகிறார், அரசியலமைப்பு சட்ட விதிகளை மதித்து மாநிலங்களுக்குரிய உரிமையை அளிக்க மறுக்கிறார் என்பதெல்லாம் சரி, ஆனால் ஆக்கப்பூர்வமாக பேச வேண்டிய மாநாட்டிலும் ஆளுநருக்கு எதிரான கருத்தை மட்டுமே பேசியது சரியான நிலைப்பாடா, ஆளுநர் சட்டமன்றத்தில் இதேபோல் நடந்துக்கொண்டபோது அவர் சொன்னதை ஏற்காததால் வெளிநடப்பு செய்தார் ஆளுநர். அப்போது அவர் பேசியது அனைத்தும் சபை குறிப்பிலிருந்து நீக்கி சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தற்போது இது அவருக்கே நடந்துள்ளது.
இதையும் படிங்க: எதிர்கட்சிகள் பக்கம் கேமரா திரும்பாதா? - இபிஎஸ் கேள்வி...