தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் வாழ்க்கையை தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளார். 2026ஆம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தலுக்கான அவரது வியூகத்தை இப்போதிருந்தே ஆரம்பித்துள்ளார். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை தொடங்கினார். அந்த மாநாட்டில் அவரது ரசிகர்கள் உட்பட, கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாடு பல்வேறு விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றது.

கடந்த டிசம்பர் மாதம் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டு பேசிய கருத்துகளும் பரபரப்பை ஏற்படுத்தின. அதேநேரத்தில் விஜய்யின் அரசியல் மீது பல்வேறு விவாதங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பனையூர் அலுவலகத்தில் அழைத்து நிவாரணம் வழங்கியது, தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாளில் அலுவலகத்தில் வைத்தே படங்களுக்கு மரியாதை செலுத்துவது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அவரை, பனையூர் பண்ணையார் என்று விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் விஜய் நேரடியாக ஆளுநரை சந்தித்து பேசியிருந்தார்.இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏன் விஜய் ஆளுநரை சந்தித்தார் என்பதற்கு புது விளக்கம் அளித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர் .

சென்னை விமான நிலையத்தில் இயக்குனரும் தவெக தலைவர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது புத்தாண்டு எல்லாருக்கும் நன்றாக இருக்கும். வெற்றிக்கரமாக இருக்கும். எல்லாரும் சந்தோசமாக நல்லா இருக்க வேண்டும் என்கிறார்.
மேலும் அவரிடம் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் போராட்டம் நடக்கிறதே என கேட்டதற்கு நல்ல விசயத்திற்கு நல்லவங்க போராட்டம் நடத்துகின்றனர். விஜய் ஆளுநரை சந்தித்து குறித்து கேட்டதற்கு விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். அதனால் கவர்னரை சந்தித்து தான் ஆக வேண்டும். இது நல்ல விசயம் தானே என்றார்.விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்திவந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது விஜய் செய்யும் செயல்களுக்கு தனது முழுஆதரவையும் தெரிவித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க எங்களிடம் இருந்து பறிக்காது..அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை..!