தமிழக அரசுக்கும் கவர்னர் ரவிக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் இரு தரப்பினரும் அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 24 மணி நேரம் கெடு விதித்திருந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் இந்த வழக்கில் நீதிபதிகள் முக்கிய உத்தரவை பிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு விவரம் வருமாறு:-
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் அசோதாக்களுக்கு கவர்னர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், இந்த மசோதாக்களை நிலுவையில் வைத்திராமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும், அரசியல் சாசனத்தின் 200 வது பிரிவுக்கு இது எதிரானது என்றும் குறிப்பிட்டு, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முதலில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: காந்தியை சுட்டுகொன்று கொண்டாடியவர்கள் எந்த சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள்.. சொல்லுங்க ஆளுநரே.. செல்வபெருந்தகை கிடுக்கிப்பிடி.!
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அது குறித்து தனது தீவிர கவலையை வெளியிட்டது. இதற்கிடையில் தமிழக அரசு மற்றொரு ரெட் மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த மனுவில் தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க வேண்டுமென கவர்னர் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜே பி பர்திவாலா, ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை அன்று விசாரித்தது. விசாரணையின் தொடக்கத்திலேயே இந்த விவகாரத்தினால் மாநில அரசும் மாநில மக்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதைத்தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார்.
அப்போது அவர், " அரசியலமைப்பு சட்டத்தின் 200 வது பிரிவின்படி சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றிஅனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். முதன்முறையாக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் கவர்னர் அவற்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியும்
ஆனால் ஒப்புதல் அளிக்க மறுத்து சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்பப்படும் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியாது.

மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான் கவர்னர் நடக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டு கவர்னர் நடந்து கொள்ள வேண்டும். சட்ட விதிகளை அவர் மீற முடியாது . சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு கூறியதை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை தொடர்ந்து அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு முதலமைச்சர் கடந்த மார்ச் 23ஆம் தேதி அன்று கடிதம் எழுதி இருந்தார்.
இருப்பினும் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுத்துவிட்டார். குற்றவாளி என்ற தீர்ப்பு தான் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறதே தவிர, தீர்ப்பு ரத்து செய்யப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு புதிய விளக்கம் ஒன்றையும் அப்போது கவர்னர் கூறி இருந்தார்.
பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்ததற்கு எதிராகவும், பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னருக்கு உத்தரவிட கோரியும் இடையீட்டு மனு ஒன்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அதைத்தொடர்ந்து பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது பேசிய நீதிபதிகள், ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்த மசோதாக்கள் எவை எவை? என்று கூறும்படி கேட்டனர்.
அதற்கு முகுல் ரோத்தகி, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத் திருத்த மசோதா, பல்கலைக்கழக சட்ட (சென்னை பல்கலைக்கழகம் நீங்கலாக) அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதாக்கள் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா (12) தமிழ்நாடு தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா (18) ஆகும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்த மசோதா பல்கலைக்கழகங்களின் சட்ட திருத்த மசோதாவாகும் என்று தெரிவித்தார்.

அதை தொடர்ந்து நீதிபதிகள், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் மீது அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? எதன் அடிப்படையில் கவர்னர் ஜனாதிபதிக்கு மசோதாக்களை அனுப்பி வைக்க முடியும்? தவறினால் ஏன் மசோதாக்கள் தொடர்பாக முடிவு எடுக்க முடியவில்லை என தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, "ஒரே உரையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது"; கவர்னர் சூப்பர் முதல்வராக செயலாற்ற முடியாது. பொது பட்டியலில் இருக்கும் விவகாரங்கள் தொடர்புடைய மசோதாக்களை மட்டுமே கவர்னர் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க முடியும். இது போன்ற கவர்னரின் செயல்பாடுகள், கேரளா, பஞ்சாப் போல சில மாநிலங்களில் மட்டுமே தொடர்வதால் ஆட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை பலனற்று போக செய்யும் முறையில் கவர்னர் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்திற்கு வழக்கு தொடரும் அனுமதியை வழங்காமல் நான்கு கைதிகளின் முன் விடுதலை தொடர்பான கோப்புகள் குறித்தும் முடிவு எடுக்காமலும் கவர்னர் இருக்கிறார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத பட்சத்திலும் பண மசோதாவாக இல்லாத பட்சத்திலும் அவற்றை உடனடியாக திருப்பி அனுப்பியாக வேண்டும். இல்லை என்றால் அரசியல் அமைப்பு சாசன சட்டம் கேலி கூத்தாகிவிடும். அரசியல் அமைப்பு சாசனத்தின் 200 வது பிரிவில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லையும் கவர்னர் மீறி இருக்கிறார்.
கவர்னர் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதமானது. மசோதாக்கள் தொடர்பாக ஜனாதிபதி எடுத்த முடிவு செல்லாது என அறிவிக்கும் படியும் 10 மசோதாக்களையும் மீண்டும் கவர்னரிடமே மத்திய அரசு ஒப்படைக்கவும் அவற்றுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் 200 வது பிரிவின்படி" ஒப்புதல் அளிக்கும்படி கவர்னருக்கு உத்தரவிடவும் வேண்டும் என்றும் வாதிட்டார்.
தமிழக அரசின் மூத்த வழக்குரைஞர் பி வில்சன் தனது வாதத்தின் போது, திடீரென ஒரு நாள் அமைச்சரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளதாக கவர்னர் தெரிவித்தார். அமைச்சரவையின் ஆலோசனையின் படி கவர்னர் செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. நாடாளுமன்ற சட்டமன்ற வடிவிலான ஆட்சியில் அமைச்சரவையின் ஆலோசனை படியே அவர் செயலாற்ற வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் முதலமைச்சர் கவர்னர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையிலும் கவர்னர் அழைத்ததன் பேரிலும் முதலமைச்சரும் கவர்னர் மாளிகைக்கு தேநீர் விருந்துக்கு டிசம்பர் 30-ஆம் தேதி சென்றார். அமைச்சரவையின் ஆலோசனைப்படி கவர்னர் நடக்க வேண்டும் என்பதையும் கோரிக்கை மனுவில் தெரிவித்தார்.

ஆனால் இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. தமிழ்நாடு கவர்னர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான் செயல்பட வேண்டும்' என்றும் வாதிட்டார்.
இந்த சூழ்நிலையில் இந்த வழக்கை வியாழக்கிழமை (இன்று )விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்து இருந்தனர். மேலும் இந்த விவகாரங்கள் குறித்து தமிழக அரசுடன் பேசி 24 மணி நேரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கி இருந்தது.
இந்த நிலையில் வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் விசாரணையின் போது ஏற்கனவே 24 மணி நேரம் கெடு விதித்திருந்த உச்ச நீதிமன்றம் இன்று முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்ப்பு உச்ச நீதிமன்ற வட்டாரத்தில் நிலவுகிறது.
இதையும் படிங்க: பட்டியல் சமூகத்திலிருந்து முதல்வர் வர வேண்டும்.. ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி சரவெடி!