புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முருகேஷ் (25). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகே இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு நின்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர்.
இதில் முருகேசன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மழையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் முருகேசனை வெட்டிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி முருகேசன் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் என 500 க்கும் மேற்பட்டோர் மழையூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் அந்த பகுதியிலிருந்த டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது எனக்கூறி பூட்டப்பட்ட டாஸ்மார்க் கடையை அடித்து நொறுக்கினர்.
இதையும் படிங்க: 25 வயது இளைஞர் துடிதுடிக்க வெட்டிக்கொலை..! டாஸ்மாக்கை சூறையாடிய பெண்கள்..!

பதட்டமான சூழல் நிலவியதால் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். ஆலங்குடி டிஎஸ்பி கலையரசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் அடிப்படையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

மேலும் இந்தப் போராட்டம் நள்ளிரவு 12:30 மணி வரை தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் வருவாய் துறைனர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று இளைஞர் முருகேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மழையூரில் வர்த்தகர்கள் முழுமையாக தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் உள்ள அரசு மதுபான கடையும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை நடந்த இடத்தில் முருகேஷ் உறவினர்கள் மற்றும் அவரது கிராமத்தினர் 200க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளதால் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இளைஞர் முருகேஷ் கொலை செய்த வழக்கில் கருப்பட்டிபட்டியை சேர்ந்த ஐயப்பன் (20) உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முருகேசனின் உறவுக்காரப் பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த மாற்று சமுதாய இளைஞர் காதலித்து அந்த பெண்ணை அழைத்துச் சென்றது தெரிந்தது. மீண்டும் பெண்ணை மீட்ட முருகேசன், காதலித்த இளைஞரின் உறவினர்களை மிரட்டி உள்ளார்.

காதலனுக்கு ஆதரவாக கருப்பட்டிப்படி கிராமத்தில் இருந்து மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அரிவாள்களுடன் வந்ததையறிந்த, முருகேசனின் உறவினர்கள் அப்பகுதியில் திரண்டதால் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் ஐயப்பன் என்ற ஒரு இளைஞர் மட்டும் அரிவாளுடன் சிக்கிக் கொண்டார். முருகேஷ் உறவினர்கள் ஐயப்பனை கவனித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஐயப்பனுக்கு அவமானமும் காதலனுக்கு ஏமாற்றமும் ஏற்பட்ட பகைமை வளர்ந்துள்ளது. இதன் காரணமாகவே முருகேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில்தான் மழையூரில் குவிந்துள்ள முருகேஷ் உறவினர்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டாலும், முருகேஷ் உடலை பெறமாட்டோம் என்றும் கைது செய்யப்பட்டவர்களை தங்கள் கண்ணில் காட்ட வேண்டும் என்றும் அதோடு மட்டுமின்றி கொலைக்கான முழுமையான காரணமும் தெரிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் முருகேஷ் கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்து அந்த பகுதியில் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ED சோதனைக்கு எதிரான வழக்கு.. நீதிபதியை மாற்றக்கோரி முறையீடு..!