டெல்லியில் இருந்து இன்று இரவு 10:20 மணியளவில் தனி விமானத்தில் சென்னை வரும் அமித்ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை முதல் மாலை வரை தமிழக பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசவும் திட்டமிட்டுள்ளார். மாலையில் மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு செல்கிறார். அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் அங்கு வர உள்ளதாக தெரிகிறது. அங்கு நடக்கும் ஆலோசனையை முடித்த பின் அமித்ஷா நேராக விமான நிலையம் செல்கிறார்.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காததற்கு திமுகவும் ஒரு காரணம் என பாஜக மேலிடம் கருதுகிறது. எனவே தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க, அக்கட்சிக்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு.. திகைத்து போய் சைலண்ட் மோடில் அதிமுக.. விளாசும் திமுக கூட்டணி கட்சி!
இனி பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என உரக்க சொல்லிய எடப்பாடி பழனிசாமி ரகசியமாக டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். கூட்டணி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை குறித்தே பேசியதாகத் தெரிவித்தார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைமை நம்ப மறுப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதற்கு ஒரு உதாரணமாக, மக்களவை தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடியின் பக்கத்தில் உற்சாகமாய் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, அந்த பிரிண்ட் வெளியே வருவதற்குள் கூட்டணியை உதறிய சம்பவம் பாஜக தலைவர்கள் கண் முன்னே தற்போதும் நிழலாடுவதாக கூறப்படுகிறது. இதனால் இப்போதே தங்கள் வளையத்திற்குள் கொண்டு வந்து கடிவாளம் போடுதவற்கு திட்டம் வைத்து இருக்கிறார்கள்.
தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் பேசி ஒரு நல்ல முடிவு உடனே எடுத்து விட வேண்டும் உறுதிபட சொல்லி இருக்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கு உங்கள் தரப்பில் ஒரு டீமை தயார் செய்து உடனே சொல்லுங்கள். எங்க தரப்பில் நாங்கள் தயாராக இருகிறோம் எனச் சொல்லி இருக்கிறார்கள். கூட்டணியை சிதைக்கும் வகையில் பேசும் ஜெயகுமார், முனுசாமி போன்றவர்கள் இடம்பெறக் கூடாது.

எங்கள் தரப்பில் அண்ணாமலை இடம் பெற மாட்டார் என உத்தரவும், உத்தரவாதமும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த கமிட்டியை உடனே அறிவிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்கள். கூட்டணி இருப்பதாக சொல்லி இழுத்துக் கொண்டே கடைசி வரை போய் விடலாம் என நினைத்திருந்த எடப்பாடி பழனிசாமி இப்போது ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் ரொம்பவே தவிப்புக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை வரும் உள் துறை அமைச்சர் அமித் ஷா.. முக்கிய நபர்களுடன் சந்திப்பு.. பரபரக்கும் பாஜக!