உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் டில்லியில் எம்.ஏ., படித்து வந்தார். இவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி, தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் முதுகலை மாணவி கூறியதாவது; நான் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி, எனது பெண் தோழிகளுடன் ஒரு பாருக்குச் சென்ற போது நிஷ்சல் சந்தக் என்பவர் அறிமுகமானார். அதிகாலை 3 மணி வரை மது அருந்திய பிறகு குடிபோதையில் இருந்த என்னை, அவரது இல்லத்திற்கு வருமாறு தொடர்ந்து வற்புறுத்தினார். அவரது தொடர்ச்சியான வேண்டுகோளின் பேரில், அவருடன் அவரது இல்லத்திற்கு ஓய்வெடுக்க செல்ல ஒப்புக்கொண்டு சென்றேன். அவரது இல்லத்திற்கு பயணம் செய்த போது தகாத முறையில் என்னை தொட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.

மேலும், அவர் நொய்டாவில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, குர்கானில் உள்ள அவரது உறவினர் ஒருவரின் பிளாட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து நொய்டா காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தேன் எனவும் சொன்னார். அந்த புகாரின் அடிப்படையில், நிக்ஷல் சந்தக் மீது வழக்கு பதிவு செய்த நொய்டா போலீசார் அவரை செய்து கைது செய்தனர். சிறையில் இருந்த அவர், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: ‘மனிதநேயமற்ற, உணர்வற்ற செயல்’: பலாத்கார வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை..!

அந்த ஜாமீன் மனுவில், அந்த பெண் ஓய்வெடுக்க விரும்பி தனது விருப்பத்தோடு தான் வந்தார். அவரை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. மாறாக, அவர் சம்மதத்துடன் தான் உறவு மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். அந்த மனு மீதான விசாரணை அலகாபாத் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங் தெரிவித்ததாவது ; பலாத்கார புகார் கூறியுள்ள பெண், டில்லியில் எம்.ஏ., படித்து வந்தார். கடந்தாண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி, தன் நண்பர்களுடன் இணைந்து மதுபானம் குடித்துள்ளார். அதிகாலையை தாண்டியும் குடித்துள்ளனர். அதீத போதையில் இருந்ததால், அந்தப் பெண், தன் ஆண் நண்பர் நிக்ஷல் சந்தக் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தார்.

ஆனால், நிக்ஷல் சந்தக், தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், வேறொரு உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் கூறியுள்ளார். தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களில் இது நிரூபிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ள வாக்குமூலம் மற்றும் வழக்கின் தன்மையை ஆராயும்போது, இது பலாத்காரமாக தெரியவில்லை. பரஸ்பர ஒப்புதலுடன் நடந்த உடலுறவாகவே தெரிகிறது. முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் பெண் என்பதால், எது சரி, எது தவறு என்பதை நிச்சயம் இந்தப் பெண் உணர்ந்திருப்பார். அவருடைய குற்றச்சாட்டு உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், பிரச்னையை அவரே வரவேற்றுள்ளார். அதனால், அதற்கு அவர் தான் பொறுப்பாளி. இதை பாதிக்கப்பட்ட பெண்ணும் கூறியுள்ளார்.

எனவே இதை பலாத்காரமாக கருத முடியாது என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது எனக்கூறி நிக்ஷல் சந்தக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிபதியின் தீர்ப்பு தற்போது சர்ச்சை ஆகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு பாலியல் வழக்கு ஒன்றில் ஒரு பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது, அவரின் ஆடைகளை கலைத்து இழுக்க முயற்சிப்பது பாலியல் வன்கொடுமையோ அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுகளாகாது என் அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்த கருத்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்து குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், வேதனை தெரிவித்ததோடு இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
இதையும் படிங்க: சர்ச்சையான ‘மார்பகத்தை பிடிப்பது பலாத்காரமில்லை’ தீர்ப்பு.. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்..!