பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு அண்ணாமலையுடன் சேர்த்து சிலர் சீனியர்களும் போட்டா போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் அண்ணாமலை:
ஜனவரி 21ம் தேதி பாஜகவின் புதிய தலைவர் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைவர் பதவிக்கான இந்த ரேஸில் அண்ணாமலையுடன் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகிய சீனியர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலை 2021ம் ஆண்டு ஜூலையில் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். பாஜகவில் மாநில தலைவர்களுக்கான பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். கட்சியின் விதிப்படி ஒருவர் இரண்டு முறை தலைவராக பதவி வகிக்கலாம். இதனால் அண்ணாமலைக்கே இரண்டாவது முறையாக வாய்ப்பளிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: “இப்ப என்ன செய்யுறது?” விழிபிதுங்கி நிற்கும் பாஜக, அதிமுக - விளாசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்!

பாஜக தலைமையப் பொறுத்த வரை அண்ணாமலையை மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும் என நினைப்பதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலை தலைவரான பிறகு தமிழகத்தில் பாஜகவின் வாக்குசதவீதம் அதிகரித்திருப்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மற்றொருபுறம் கட்சியின் முக்கிய புள்ளிகளான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணாமலை மீது பாஜகவில் அதிருப்தியில் இருக்கும் சீனியர்கள் இவர்களுக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலை மீது கடுப்பில் சீனியர்கள்:
தமிழிசை சவுந்தரராஜன் பாஜக மாநில தலைவராக இருந்த போது, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற முழக்கத்துடன் வலம் வந்தார். இதை ஆரம்பத்தில் ட்ரோல் மெட்டீரியலாக நெட்டிசன்கள் பார்த்தாலும், தமிழிசையின் தலைமை தமிழகத்தில் பாஜகவைப் பற்றி பேச வைத்தது. தமிழிசைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் பாஜகவை பெரும் வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமை அண்ணாமலைக்கு உண்டு. தமிழிசைக்குப் பிறகு அடுத்த ஒரு சீனியர் லீடர் தான் அடுத்த தமிழக தலைவராக வருவார் என அனைவரும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்த நிலையில், தமிழக இளைஞர்களிடையே பாஜகவை வலுப்படுத்த துடிப்பான இளம் தலைவரைத் தேடிக்கொண்டிருந்தது பாஜக தலைமை. பாஜகவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே வந்தது போல், கட்சியில் இணைந்தார் கர்நாடக மாநிலத்தின் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை.

முன்னாள் காவல் அதிகாரி என்பதாலும், விவசாயம் செய்யும் ஹைடெக் இளைஞர் என்பதாலும் அண்ணாமலையை ஏராளமான இளம் தலைமுறையினர் தங்களது ரோல் மாடலாக கொண்டிருந்தனர். இதனால் அண்ணாமலையை பாஜகவின் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வந்த உடனயே அண்ணாமலைக்கு கட்சியில் தலைமை பொறுப்பு கொடுக்கப்பட்டது அப்போதிலிருந்தே பாஜக சீனியர்கள் இடையே புகைச்சலை உண்டாகி வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவு அண்ணாமலையின் தலைமையை தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் விமர்சித்த சம்பவங்களும் அரங்கேறின.
முந்தைய காலங்களில் பாஜகவின் சீனியரான இல.கணேசன் வீட்டு திருமணத்திற்கு செல்லாதது, திமுக நடத்திய கலைஞர் நாணய வெளியிட்டு விழாவில் பங்கேற்றது, அதிமுகவுடனான கூட்டணியை வெட்டிவிட்டது என அண்ணாமலை மீது பாஜக சீனியர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். அனைத்திற்கும் மேலாக அண்ணாமலை தனக்கென தனி வார் ரூம் அமைத்து சோசியல் மீடியாவில் தன்னைப் பற்றி பிரபலப்படுத்திக் கொள்கிறார். கட்சியை பற்றியோ அதன் வளர்ச்சியைப் பற்றியோ அவருக்கு துளியும் கவலை இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
தமிழிசை Vs அண்ணாமலை:
மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தேர்தல் மூலமாக எப்படியாவது மத்திய அமைச்சர் பதவியைப் பிடித்துவிட வேண்டும் என தமிழிசையும், அண்ணாமலையும் லாபி செய்ததாக கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி சேராதது மட்டுமல்ல, பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசலும் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. குறிப்பாக பாஜக சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு அண்ணாமலை தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி புரோமோட் செய்து கொள்வது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பாஜகவில் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்தே அவரது அணுகுமுறையில் விருப்பம் இல்லாதபோதும், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட சீனியர்கள் அதனை வெளிப்படையாக கட்டிக்கொண்டதில்லை. ஆனால் முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் அண்ணாமலையை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார்.

தெலங்கானா ஆளுநர் பதவியை உதறித்தள்ளிவிட்டு தென்சென்னை தொகுதியில் எம்.பி. பதவிக்கு போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் இரண்டாம் இடம் பிடித்தார். இதன் மூலம் தமிழகத்தில் தனக்குள்ள செல்வாக்கை பாஜக தலைமையிடம் நிரூபிததார். இதனால் அவரே மீண்டும் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் தான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்திற்கு திரும்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை மெய்யாக்கும் வகையில், மக்களவை தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதனால் தமிழிசை சவுந்தரராஜனை சோசியல் மீடியாவில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அண்ணாமலை ஆதரவாளர்களின் இந்த செயல் பாஜக மூத்த நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்ததோடு, தலைமைக்கு சரியான மாற்றம் தேவை என்ற கருத்தையும் வலியுறுத்த வைத்துள்ளது. இதனால் அண்ணாமலை மீண்டும் தலைவராவதற்கு பாஜக சீனியர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாஜக மாநில தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் விரைவில் நடைபெறவுள்ளது. பாஜக மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
இதையும் படிங்க: “ஆளுநருக்கு எச்சரிக்கை... அண்ணாமலைக்கு நன்றி”... தனது பாணியில் பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்!