தமிழகம் முழுவதும் உள்ள 171 அரசுக் கல்லூரிகளில் 7,360 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 11 மாத காலம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் ஊதியம் சுமார் 80,000 ரூபாயாக இருக்கையில், முறையான தகுதியின் அடிப்படையில் தேர்வான கௌரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பு ஊதியம் வெறும் ரூ.20,000 முதல் ரூ.25,000 மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாதச் சம்பளமாக வழங்கப்பட வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், இவர்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் திமுக அரசை வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 21.3.2024 அன்று தீர்ப்பளித்துள்ளதை அண்ணாமலை சுட்டிக்காட்டி உள்ளார். இந்தத் தீர்ப்பை, தமிழக உயர் கல்வித்துறை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை காந்தி ஊழலின் உறைவிடம்.. பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறை தண்டனை நிச்சயம்..! அண்ணாமலை ஆவேசம்
தமிழகத்தில் பணியாற்றக்கூடிய கௌரவ விரிவுரையாளர்கள் எவரையும் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நியமிக்கவில்லை என்றும், அதனால், மானியக் குழு பரிந்துரைத்துள்ள மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க இயலாது என்றும், பொய்யான விளக்கத்தை திமுக அரசு கூறியுள்ளதாக அண்ணாமலை புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கூட மதிக்காமல், கௌரவ விரிவுரையாளர்களை வஞ்சித்து வரும் திமுக அரசின் செயல்பாடு முற்றிலும் கண்டிக்கத்தக்கது. நீதிமன்றத்தில் பொய்யான விளக்கம் கொடுத்த அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கௌரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரசுக் கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த மூன்று மாதங்களாக, கௌரவ விரிவுரையாளர்களுக்கான முதல் மாத ஊதியமே இன்னும் வழங்கப்படவில்லை எனச் செய்திகள் வெளிவந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறுகிறார் அண்ணாமலை.

எனவே, எந்தவித காலதாமதமும் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும் என்றும், கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 56ன் படி, புதிய விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெண் ஏடிஜிபிக்கே பாதுகாப்பில்லை...மூடிமறைத்து மவுனமாக்க முயல்வதா...எடப்பாடி, அண்ணாமலை விமர்சனம்