சமீப காலமாகவே இளம் சிறுவர்கள், சிறுமிகள் மிகச் சாதரண விஷயங்களுக்கு எல்லாம் மனம் உடைந்து தவறான வழிகளை தேர்ந்தெடுப்பது அதிகரித்து வருகிறது. கேட்டது எல்லாம் கிடைக்கும் மனநிலையில் வளரும் குழந்தைகள் சிலர், ஒரு சில நோ பதில்களுக்கே மனம் உடைந்து போகின்றனர். அனைத்தும் எளிதாய் கிடைக்கும் என்பதால், வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர் கொள்ள பயம் கொள்கின்றனர்.
ஒருசில பெற்றோரும் தங்களது குழந்தைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனரே தவிர, அவர்களுன் தன்னம்பிக்கையை வளர்க்க, சின்ன சின்ன சவால்களை உருவாக்கி தர மறக்கின்றனர். இதன் காரணமாகவே இளம் சிறார் மரணங்கள் நிகழ்வதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை கொடுங்கையூர் கொய்யா தோப்பு காந்திநகர் முதல் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் மேத்யூ. வயது 17. சிறுவன் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போது இவரது பெற்றோர் இருவரு ஒரு விபத்தில் இறந்து விட்டனர். அன்று முதல் சிறுவனை அவனது தாத்தா, பாட்டி இருவரும் வளர்த்து வந்துள்ளார்.
சிறுவன் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது தாத்தா அல்போன்ஸ் ஏசுதாஸ், கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாஸ்டராக உள்ளார். பெற்றோர் இல்லாத சிறுவன் என்பதால் வீட்டில் மேத்யூக்கு அந்த கவலையே தெரியாதபடி தாத்தா, பாட்டி வளர்த்துள்ளனர். நன்றாக படிக்க வேண்டும் என்றே அறிவுறுத்தியும் வந்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்.. போதை மாத்திரை விற்பனை அமோகம்.. கடத்தல்காரர்களை தட்டிதூக்கிய போலீஸ்..!

இந்த நிலையில் சிறுவன், வயது கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக அவரது பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் தாத்தா, பாட்டியை எட்டி உள்ளது. படிக்கும் வயதில் எதற்கு இதெல்லாம்.? 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தால் நல்ல கல்லூரியில் சேரலாம்.. வாழ்க்கை நல்ல விதமாக அமையும் என தாத்தா, பாட்டி இருவரும் கண்டித்துள்ளனர். அவர்களின் கண்டிப்பில் உள்ள நல்லதை அறியாத அந்த சிறுவன் அன்று முதல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் தாத்தா, பாட்டி வெளியே சென்று இருந்தனர். மீண்டும் சிறுவனின் தாத்தா நேற்று மதியம் ஒரு மணி அளவில் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் சிறுவன் தூக்கிட்ட நிலையில் மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொடுங்கையூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினைத் தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிடவும் அரசும் சினேகா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காத்துள்ளன. உதவிக்கு அழையுங்கள்: அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வத் தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060
இதையும் படிங்க: பெண் கல்லால் அடித்து கொலை.. கள்ளக்காதலன் போலீசில் சரண்.. தவிக்கும் குழந்தைகள்..!