தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பிறந்தநாள் வாழ்த்து மடலில் தமிழில் கையெழுத்திட்டிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதையடுத்து, சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 15லிருந்து 20 ஆக உயர்வு.. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..!
தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதற்கு முன்னதாக தனது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

முன்னதாக இன்று காலை தனது இல்லத்தில் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மகள், பேரன், பேத்திகள் ஆகியோருடன் இணைந்து எளிமையான முறையில் கேக் வெட்டி கொண்டாடினார். மகன் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேக் ஊட்டி விட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுகவினர் பல்வேறு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் - முதல்வர் ஸ்டாலின் விளாசல்.