விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான சொக்கம்பட்டி, ஏர்ரம்பட்டி, கிருஷ்ணாபுரம், பண்ணை மூன்றடைப்பு, புதுப்பட்டி, உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிட்டுள்ளனர்.
தற்போது பருத்தி வெடிக்க தொடங்கி அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் பருத்தி சுலைகளை பிரித்து பக்குவப்படுத்தி அதற்கு நல்ல விலையை எதிர்பார்த்து விவசாயிகள் பருத்தியை சேமித்து வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு புதுப்பட்டியை சேர்ந்த விவசாயியான பட்டாணி (எ) அடைக்கலம்(67) என்பவர் 2 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் விளைந்த தனது பருத்திக்கு நல்ல விலையை எதிர்பார்த்து காத்திருந்தார்.
இதையும் படிங்க: திராவிடத்தின் பொய் பித்தலாட்டத்தைதான் அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்கணுமா.? சசிகாந்தை போட்டு பொளந்த அண்ணாமலை.!
அப்போது உள்ளூர் வியாபாரிகள் சிலர் விவசாயி அடைக்கலத்தை அணுகி பருத்தியை கிலோவிற்கு ரூ.67 வரை அதாவது குவிண்டாலுக்கு ரூ.6700 வரை விலை கொடுப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் விலை குறைவாக இருப்பதாக கருதிய விவசாயி அடைக்கலம் மேலும் நல்ல விலையை எதிர்பார்த்து காத்திருந்தார்.

அப்பொழுது காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான சத்யராஜ் என்பவர் உள்ளூர் நபரை வைத்து விவசாயி அடைக்கலத்தை அணுகிய நிலையில் பருத்திக்கு நல்ல விலை கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி ரூ.73 க்கு அதாவது குவிண்டாலுக்கு ரூ.7300 வரை விலை கொடுப்பதாக கூறியுள்ளார்.
உள்ளூர் வியாபாரியை விட அதிக விலை கொடுப்பதாக வியாபாரி சத்யராஜ் கூறியதும் அதனை நம்பிய விவசாயியான அடைக்கலம் தான் சேமித்து வைத்திருந்த மொத்த பருத்தியையும் வெளியூர் வியாபாரியான சத்யராஜிடம் விற்பனை செய்தார். வியாபாரி சத்யராஜ் தான் கொண்டு வந்த எலக்ட்ரானிக் தராசு மூலமாக அடைக்கலத்தின் பருத்தியை தனது கூலியாட்கள் மூலமாக எடை போட்டு தனது வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பருத்தி வியாபாரியான சத்யராஜ் விவசாயியான அடைக்கலத்திடம் உங்கள் பருத்தி 4 குவிண்டால் எடை இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வண்டியில் ஏற்றப்பட்ட பருத்தியையும், வியாபாரி கொடுத்த அதிக விலையையும் பார்த்து எடையில் சந்தேகமடைந்த விவசாயி அடைக்கலம் தனக்கு தெரிந்த வியாபாரியை வரவழைத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரியான சத்யராஜ் எலக்ட்ரானிக் தராசை சரி செய்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த விவசாயி அடைக்கலம் நன்கு கவனித்த நிலையில் மேலும் சந்தேகமடைந்து பருத்தி எடை போடுவதை நிறுத்தினார்.

இந்த நிலையில் வண்டியில் ஏற்றப்பட்ட பருத்தி முழுவதையும் தனக்கு தெரிந்த உள்ளூர் வியாபாரியை கொண்டு மீண்டும் எடை போட்டார். அப்போது பருத்தியின் எடையானது 7 குவிண்டால் இருப்பதையும், சுமார் 3 குவிண்டால் வரை தனது பருத்தியை திருடிய வியாபாரி சத்யராஜ் எடையில் பெரும் மோசடி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியும், கோபமும் அடைந்தார்.
இதுகுறித்து பருத்தி வியாபாரியும், திமுக பிரமுகருமான சத்யராஜிடம் கேட்டதற்கு சரிவர பதில் சொல்ல முடியாமல் திணறிய நிலையில் ஏதேதோ சொல்லி சத்யராஜ் சமாளித்தார். எடையில் மோசடி செய்த 3 குவிண்டால் பருத்தியின் விலை வியாபாரியின் கணக்குப்படி ரூ.21 ஆயிரம் ஆகும்.
இந்த நிலையில் அங்கிருந்த விவசாயிகள் வியாபாரி சத்யராஜிடம் சரமாரியாக கேள்வி கேட்டு விரட்டியடித்த நிலையில் தனது கூலியாட்களையும், வாகனங்களையும் எடுத்துக்கொண்டு அசம்பாவிதம் ஏதும் நடக்குமுன் அவசர அவசரமாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மேலும் வியாபாரி சத்யராஜ் இதுபோன்று பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகளிடம் பருத்தியை கொள்முதல் செய்திருப்பதும், எடையில் பெருமளவு மோசடியில் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் உள்ளூர் வியாபாரிகள் ஓரளவிற்கு பருத்தி விலையை அனுசரித்து கூறிய நிலையில் வெளியூர் வியாபாரி அதிக விலைக்கு எடுப்பதாக கூறிய ஆசை வார்த்தைகளை நம்பிய விவசாயிகளிடம் குவிண்டால், குவிண்டாலாக எடையில் பெரும் மோசடி செய்த செயலை விவசாயி அடைக்கலம் கண்டுபிடித்ததால் சுமார் 3 குவிண்டால் பருத்தி பத்திரமாக மீட்கப்பட்டது.

இந்த நிலையில் பருத்தி மோசடி பேர்வழியான வியாபாரி சத்யராஜ் மீண்டும் வியாபாரிகளை தொடர்பு கொள்வதாகவும், அதன்பேரில் வேறு கிராமங்களுக்கு சென்று விவசாயிகளிடம் பருத்தியை கொள்முதல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சத்யராஜ் போன்ற வெளியூர் பருத்தி வியாபாரிகளிடம் எடை சம்மந்தமாக மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளானர்.மேலும் இதுபோன்ற சீசனில் விவசாயிகளிடம் பருத்தி எடையில் பெரும் மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சரவணனை அமுக்கு..! பிரிந்தே கிடந்தாலும் ஒற்றை ஆளுக்காக இணைந்த அதிமுக மும்மூர்த்திகள்..!