தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது, திறந்தவெளி அனுமதி கொள்கை எனும் ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழான 10வது சுற்று ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தை மத்திய அரசு அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு முயற்சித்தது. கிராம மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் இணைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தத்தைத் தொடர்ந்து அந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது..
இதையும் படிங்க: குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகள் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க முடியாது - மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம்

நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால் தானே எதிர்த்து வருகிறீர்கள், கடற்பரப்பில் எடுத்துக் கொள்கிறோம் என்ற யோசனையில் தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான ஏலத்தை மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.
இதற்கான அறிவிப்பாணை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதில் கன்னியாகுமரி கடற்பரப்பில் குறிப்பாக மன்னார்வளைகுடா, பாக் ஜலசந்தியை உள்ளடக்கிய ஆழ்கடல் பரப்பில் ஹைட்ரோ கார்பன் இருக்கிறதா என்பதை கண்டறிய பூர்வாங்க திட்டத்திற்கான நிறுவனங்களை ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 11-ந் தேதி தொடங்கிய இந்த ஏலம், ஜுலை மாதம் 31-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலம், நீர் ஆகிய இரண்டு பகுதிகளை உள்ளடக்கி மொத்தம் 1,91,986.21 சதுர கிமீ பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 25 பிளாக்குகளில் 6 நிலத்திலும், 6 ஆழமற்ற நீரிலும், 1 ஆழமான நீர்பரப்பிலும், 12 அதி ஆழ நீர்பரப்பிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆழமான நீர்பரப்பாக தமிழக கடற்கரை தெரிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நிபுணர்கள் உதவியுடன் இந்த இடங்களில் ஹைட்ரோ கார்பன் உள்ளதா? என்பதை கண்டறிந்து அவற்றுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும். பிறகு அது ஏலத்தில் விடப்பட்டு அதிக விலைகோரும் முதலீட்டாளர்களுக்கு அந்த பிளாக்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

பிரச்னை என்னவெனில், ஏற்கனவே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுடப்படுவதும், கைது செய்யப்படுவதும், விசைப்படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் என பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பல சதுர கிலோ மீட்டருக்கு கடற்பரப்பை தமிழக மீனவர்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும்.
தமிழக மீனவர்கள் இன்னும் எத்தனை இன்னல்களைத் தான் எதிர்கொள்வது?.. மாநில அரசு எதிர்க்குமா? மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?..
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சையை கிளப்பும் திமுக.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை சரமாரி அட்டாக்.!