தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்புத் தொடர்பான கூட்டு நடவடிக்கைக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதையும் படிங்க: #FairDelimitation இந்தியாவின் ஆன்மாவுக்கு பாதிப்பு - பினராயி விஜயன்.. சிறப்பாக செயல்பட்டதற்கு தண்டனையா? - ரேவந்த் ரெட்டி..!
அதில் அவர் பேசியதாவது..
நாட்டின் மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்துவதும், அந்த மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும் இதுஒரு முக்கியமான சந்திப்பு ஆகும். நாட்டின் வளர்ச்சிக்காக, மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது மிகமுக்கியமானதொரு லட்சியமாக இருந்தது. நாட்டின் இந்த கொள்கையை மாநிலங்கள் முன்வந்து ஏற்று இத்தனை ஆண்டுகளில் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு அதி முக்கியத்துவம் காட்டி வந்தது.

மாநிலங்களும் இதற்கென தாங்களாகவே திட்டங்கள் வகுத்து மத்திய அரசுடன் கரம்கோர்த்து மக்கள்தொகை கட்டுப்படுத்துதல் என்ற லட்சியத்தை அடைய உடன்நின்றன. மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பஞ்சாப், மேற்குவங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டன. ஒருவேளை இந்த மாநிலங்கள் மத்திய அரசின் திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் போயிருந்தால் இந்தியாவின் மக்கள்தொகை இன்னும் கூட அதிகரித்து இருக்கும். வளர்ச்சியும் தடைபட்டிருக்கும். இதுதான் நாட்டிற்கு இந்த மாநிலங்கள் அளித்துள்ள மிக முக்கியமானதொரு பங்களிப்பு.

அப்படி இருக்கும்போது, வெறும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு என்பது இந்த மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்கு இதுதான் பரிசா?. ஒடிசா அரசு இத்தனை ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு பிறப்பு விகிதத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பில் நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் ஒடிசா கணிசமான இடங்களை இழக்க நேரிடும். ஒடிசா மக்களின் நலன்காக்க பிஜு ஜனதாதளம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும். மக்கள்தொகை என்ற ஒரேஒரு அளவுகோலில் மட்டும் தொகுதிகளின் எண்ணிக்கை வரையறை செய்யப்படக் கூடாது.

இதுதொடர்பாக மத்திய அரசு ஒரு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி, விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டு கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நமது ஜனநாயகத்தை காக்கவும், இத்திட்டத்தை சிக்கலின்றி செயல்படுத்தவும் அதுவே சரியான வழியாக இருக்கும் என்ற நம்புகிறேன். இத்தகையதொரு சிறப்பான கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன். ஜெய் ஜெகன்னாத்..
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: #FairDelimitation தொகுதி மறுவரையறையில் மத்திய அரசின் உள்குத்து.. பாதிப்புகளை பட்டியல் போட்ட மு.க.ஸ்டாலின்..!