ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்....
இது படகோட்டி படத்தில் மீனவராக நடித்த எம்ஜிஆர் பாடிய பாடல்வரிகள். வாலி எழுதிய இந்த அற்புத வரிகள் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றளவும் தமிழக மீனவர்களுக்கு பொருந்திப் போவதுதான் துயரத்தின் உச்சம்.

தென்தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவே அஞ்சுகின்றனர். ஏனெனில், எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், விசைப்படகுகளை சிறைபிடிப்பதும் என்பது வாடிக்கையான நிகழ்வாகி விட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காணக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதும் அதன் ஒருபகுதியே. இதன்பிறகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு செல்வதும், ஒன்றிரண்டு மீனவர்கள் விடுவிக்கப்படுவதும் அவ்வாறே. ஆனால் இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைதாவது மட்டும் நின்றபாடில்லை..
இதையும் படிங்க: அடங்காத இலங்கை.. துடிக்கும் தமிழர்களை காப்பாற்ற ஸ்டாலின் கடிதம்!!

சமீபத்தில் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு 5 நாட்களுக்கு மீன்பிடிக்க அவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தடைக்காலம் முடிந்தநிலையில் நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அர்ச்சுனன், முருகேசன் ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மூவரையும் கைது செய்தனர். காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அங்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவிழா முடிந்த மறுநாளே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களோடு தற்போது கைதாகி உள்ள மூவரையும் சேர்த்து விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. போராட்டம் காரணமாக ஏறத்தாழ ஆயிரம் விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட யாழ். மீனவர்கள்... தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக புகார்..!