தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் வியாபாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனையை பெற்று தருகின்றனர். ஆனால் சமீப காலமாக வடமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வருவதும், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.
அவர்களையும் கண்டறிந்து அகற்ற போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை ஏர்போர்ட் அருகே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆலந்தூர் ஆதம்பாக்கம் பழவந்தாங்கல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட தொழில்களை குறி வைத்து ஹெராயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக புனித தோமையார் மலை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து கிடைத்த தகவலின் அடிப்படையில் துணை ஆணையர் உத்தரவின் பேரில் மீனம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ரயில் நிலையங்கள், கல்லூரி அருகில் உள்ளிட்ட பகுதிகளில் ரகசியமாக போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மீனவருக்கு வந்த பாடிபில்டிங் ஆசை.. ஸ்டிராய்டு எடுத்ததால் விபரீதம்.. சிறுநீர் வெளியேறாமல் தவித்தவர் பலி..!

அப்போது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் கைப்பையில் ஹெராயன் வகை போதைப்பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த இளைஞரை மீனம்பாக்கம் காவல் நிலைய அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் (வயது 25) என்பது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் நடந்த்திய விசாரணையில் அசாமில் இருந்து ரயில் மூலம் ஹெராயின் உள்ளிட்ட போதை பொருளை சென்னைக்கு கடத்தி வந்தது தெரிந்தது.

அவ்வாறு கடத்தி வந்த போதை பொருட்களை, ஆலந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் கல்லூரி மாணவர்களை குறி வைத்து நிஜாமுதீன் விற்பனை செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. இதை அடுத்து நிஜாமுதீனிடமிருந்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புடைய 13 கிராம் ஹெராயன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் நகரின் முக்கிய பகுதியில் ஹெராயின் விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மதுபோதையில் அராஜகம்.. போலீஸ் எஸ்.ஐ. மண்டை உடைப்பு.. கணவன் - மனைவி கைது..!