மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பாஜகவுக்கு, தான் ஆட்சி செய்யும் டெல்லியில் கடந்த 26 ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.
அதிலும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்துபோதும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த முடியாமல் திணறியது. இதன் விளைவு ஆம்ஆத்மி கட்சி சிறந்த நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கிவிடக்கூடாது, மக்களிடம் அதன் செல்வாக்கு ஆழவேறூன்றிவிடக்கூடாது என்பதற்காக தங்களால் முடிந் குடைச்சலையும், தொந்தரவுகளையும் துணைநிலை ஆளுநரை வைத்து பாஜக செய்தது.

இருப்பினும் 10 ஆண்டுகளாக மக்களின் மனதிலிருந்து அரவிந்த் கேஜ்ரிவாலையும், ஆம் ஆத்மி கட்சியையும் அகற்ற முடியவில்லை. ஆனால், அரவிந்த் கேஜ்ரிவாலின் “மிஸ்டர் க்ளஈன்” தோற்றத்தையும், நடுத்தரக் குடும்பங்களின் நண்பன் என்ற தோற்றத்தையும் உடைத்தெறிந்தால் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கமுடியும் என்று பாஜக திட்டமிட்டது.
இதையும் படிங்க: முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 6 தொகுதிகளில் 'ஆம் ஆத்மி' கட்சி வெற்றி
அதற்கேற்றார்போல் டெல்லி அரசு மதுக்கொள்கையை வடிவமைத்ததில் ஊழல் நடந்திருக்கலாம் எனக் கூறி டெல்லி துணைநிலை ஆளுநர் அறிக்கை அனுப்ப, அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது மத்தியில் ஆளும் பாஜக. தனது பரிவாரங்களான சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை மூலம் ஆம் ஆத்மி அரசுக்கும், முதல்வர் கேஜ்ரிவால், அவரின் அமைச்சரவை சகாக்களுக்கு தொந்தரவு செய்வது, விசாரிப்பது, சிறையில் அடைப்பது என அனைத்தையும் சட்டப்பூர்வமாக செய்து மக்களின் மனதில் இருந்து கேஜ்ரிவாலை படிப்படியாக நீக்கியது.

இந்த திட்டத்தின் வெற்றி சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வென்று, 26 ஆண்டுகளுக்குப்பின் பாஜக ஆட்சியை அமைக்க இருக்கிறது. 22 இடங்களைப் பெற்று ஆம் ஆத்மி எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.
2020ம் ஆண்டு தேர்தலில் 62 இடங்களில் வென்ற ஆம் ஆத்மி கட்சி இந்த முறை 22 இடங்களில் மட்டுமேவென்று 40 தொகுதிகளை இழந்துள்ளது. ஆம் ஆத்மியின் சரிவுக்கு கோடாரிக்காம்பாக இருந்தது காங்கிரஸ் கட்சி என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் “இமேஜை” உடைத்தது, ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது, திட்டங்களை செயல்படுத்தவிடாமல் இடையூறு செய்தது, நிதியை முறையாக ஒதுக்காதது என பல இடையூறுகளை பாஜக செய்தாலும், அதைக் கடந்து மக்களின் மனதில் நிற்குமாறு சில செயல்களைச் செய்ததுதான் அந்த கட்சியை வெற்றிக்கு இட்டுக்குச் சென்றது. அது என்னவென்று பார்க்கலாம்.
நடுத்தரக் குடும்பத்தினைக் கவர்ந்தது
டெல்லியில் ஆம் ஆத்மி தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தமைக்கு முக்கியக் காரணம் நடுத்தரக் குடும்பத்தினரின் ஏகோபித்த ஆதரவும், வாக்கு வங்கியும்தான். இந்த முறை அந்த வாக்குவங்கியை பாஜக குறிவைத்து, டெல்லியில் உள்ள நடுத்தரமக்களை நோக்கி தனது பிரச்சாரத்தை திருப்பியது. அதற்கு ஏற்றார்போல் மத்திய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம்வரை வருமானவரி விலக்கு அளித்து நடுத்தரக் குடும்பங்களின் ஆதரவைப் பெற்றது.

டெல்லியின் மோசமான உட்கட்டமைப்பு, மோசமான சாலைகள், போக்குவரத்துநெரிசல், இடநெருக்கடி, காற்று மாசு, அசுத்தம்நிறைந்த யமுனா நதி ஆகிய சிக்கல்களை பாஜக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது. அரசு ஊழியர்களைக் கவரும் வகையில் 8-வது ஊதியக் குழுவையும் அமைத்தது. இவை அனைத்தும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புகளைத் திறந்துவிட்டன.
மக்களைக் கவரும் வாக்குறுதிகள்
இலவசங்கள் தேவையில்லை என்றுஇலவசங்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டருக்கும் பாஜகவும், ஒரு கட்டத்தில் தேர்தல் நெருங்க, இலவசங்களை வழங்குவதற்குஒப்புக்கொண்டு வாக்குறுதிகளை வழங்கியது. ஆம்ஆத்மி கட்சியின் இலவசங்களுக்குப் போட்டியாக பாஜகவும் இலவச அறிவிப்புகளை வழங்கியது. உதாரணமாக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியைப் போன்று “மகிளா சம்ரிதி யோஜனா” திட்டத்தை கொண்டுவந்து, ரூ.2500 நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது.
இரட்டை எஞ்சின் அரசு என்று பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரின் வார்த்தைகள், ஆம் ஆத்மி- துணைநிலை ஆளுநர் மோதல் இல்லாமை, எளிமையான நிர்வாகம் ஆகியவற்றை மக்கள் முன் பாஜக எடுத்துரைத்தது.
ஆம்ஆத்மி இலவசங்கள் மீது விமர்சனம்
ஆம் ஆத்மி கட்சியைப் போல் இலவசங்களை பாஜகவும் அறிவித்தாலும், ஆம் ஆத்மி கட்சியின் மிதமிஞ்சிய இலவசங்கள் அறிவிப்பை பாஜக தேர்தல் பிரசாரத்தில் கடுமையாக விமர்சித்தது. பொய்யான வாக்குறுதிகளை ஆம்ஆத்மி கூறுகிறது, மொஹல்லா கிளினிக் மூலம்,போலியான மருந்துகள், போலியான நோயாளிகளை அனுப்புகிறார்கள் எனக் குற்றம்சாட்டியது.

பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆம்ஆத்மி மறுத்தது, சில குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் திணறியது. எப்போதும் இல்லாத வகையில் யமுனை நதி மாசுக்குள்ளாவது, குடிநீரை பாஜக விஷமாக்குகிறது என்ற ஆதரமில்லாத குற்றச்சாட்டு மக்களை சிந்திக்க வைத்தன. ஹரியானாவில் ஆம்ஆத்மி கட்சியின் தோல்வியும் தேர்தலில் எதிரொலித்திருக்கலாம்.
கேஜ்ரிவாலின் இமேஜ் மாற்றம்
ஆம் ஆத்மி ஆட்சிக்கு முதன்முதலாக வந்தபோது முதல்வர் கேஜ்ரிவால் எளிமையாக, சாதாரண குடும்பத்தினரைப் போல், பணிவுடன் பேசுவபவர் போல் காணப்பட்டார். மக்களும் தங்களுள் ஒருவராக முதல்வர் கேஜ்ரிவாலை நினைத்தனர், நம்பினர். மக்களின் பிரச்சினைக்காக எந்தநேரத்திலும் சாலையில் அமர்ந்து போராடக்கூடியவராக கேஜ்ரிவால் இருந்தார், மக்களின் மனதில் பெரிய உயரத்தில் கேஜ்ரிவால் கட்டமைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், இந்த கட்டமைப்பை வெற்றிகரமாக பாஜக தனது வியூகங்களாலும், திட்டங்களாலும் உடைத்தது. கேஜ்ரிவால் பணத்தாசை பிடித்தவர், ஊழல் செய்தவர், மக்களை சந்திக்க தயக்கம் காட்டுபவர், ஆம் ஆத்மி அரசியல் செயல்பாடின்மை ஆகியவற்றை பாஜக மக்களிடம் எடுத்துச் சென்றது. கேஜ்ரிவால் வசதியான வாழ்க்கை வாழ்வதுபோன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தி அவரை நடுத்தர மக்கள், சிறுபான்மையினர், ஏழைகளிடம் இருந்து விலக்கிவைக்க பாஜக திட்டமிட்டது.
கேஜ்ரிவாலின் நண்பரும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன், யோகேந்திர பாபு கூறுகையில் “ ஆம்ஆத்மி தலைவர் கேஜ்ரிவாலின் ஆவேசம், பரப்புரை, மாற்று அரசியல் வழங்குவதில் இருந்து கவனத்தை சிதறவிட்டது தோல்விக்கான காரணங்கள்” எனத் தெரிவித்தனர்.
மோடியின் தாக்கம்
டெல்லி தேர்தலில் பிரதமர் மோடி இறங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தது பாஜகவுக்கு பெரிய ஊக்கமாக அமைந்தது. மோடியின் பிரச்சாரத்தையும், விமர்சனத்தையும் ஆம் ஆத்மி கட்சியால் எதிர்கொள்ளவும் , சரியான பதிலடி கொடுக்கவும் முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடியின் ஆம்ஆத்மி அரசு குறித்த விமர்சனங்கள், பாஜக ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசோடும், மாநில அரசுக்கும் இணக்கமான போக்கு கிடைக்கும், பாஜக ஆதரவாளர்ளுக்கு உதவும் எனத் தெரிவித்ததும் பாஜக வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க: ரிசல்ட் இன்னும் பார்க்கவில்லை..! அதிர்ச்சி அளித்த பிரியங்கா..