தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மூன்று பிரபலங்கள் மரணித்திருப்பது மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் மூவருமே உடல் நலக்குறைவால் மரணித்திருப்பது அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விஜயின் பத்ரி திரைப்படம் மூலமாக பிரபலமானவர் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி. வில்வித்தை வீரரான இவர் பல மாணவர்களுக்கு இலவசமாக கராத்தே மற்றும் வில் வித்தை பயிற்சி அளித்து வந்தார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹுசைனி, கடந்த மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை 1.40 மணியளவில் உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகையே உலுக்கிய நிலையில், நேற்றிரவு யாருமே எதிர்பார்க்காத மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ், 48 வயதிலேயே திடீர் மாரடைப்பால் மரணித்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனோஜுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் சிம்ஸ் மருத்துவமனையில் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த மனோஜுக்கு, கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மீண்டும் சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதனிடையே வீட்டில் ஓய்வில் இருந்த மனோஜ் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 48 வயதிலேயே திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மனோஜ் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாணவனை சக மாணவர்களே கடத்தி கொலை செய்த துணிகரம்.. போலீசார் விசாரணை..

மகனை பறிகொடுத்து கதறும் பாரதிராஜாவிற்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரிலும் சோசியல் மீடியா மூலமாகவும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சற்று முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ஆகியோர் மனோஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். ஒருபுறம் மனோஜ் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த அதே தருணத்தில், அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக மூத்த நிர்வாகியும், தென்காசி சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியனின் திடீர் மரணம் தான் அது.
அதிமுக நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இன்று காலை உடல் நலக்குறைவு ஏற்பட்டு நெல்லையில் காலமானார். அதிமுகவில் இருந்து 1970-ல் நெல்லை மாவட்டம் ஆலங்குளம், 1980-ல் நெல்லை பாளையம்கோட்டை ஆகிய தொகுதிகளில் இருந்து எம்எல்ஏ-வாக இருந்தவர் கருப்பசாமி பாண்டியன். அதிமுகவில் இருந்து விலகி திமுக-வில் இணைந்து 2000-ல் தென்காசி தொகுதி திமுக எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றிருந்தார். பின்னர் கடந்த 2020-ல் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். அதிமுக மாவட்ட கட்சி பொறுப்புகளில் முக்கிய அங்கம் வகித்து வந்த கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையில் இன்று காலை உயிரிழந்தார்.
கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி, சமீபத்தில் முதல் முறையாக திரைப்படத்தை இயக்க ஆரம்பித்திருந்த மனோஜ் ஆகியோர் உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்தது சினிமா வட்டாரங்களிலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த துக்க செய்திகளில் இருந்து மீள்வதற்குள்ளாகவே அதிமுக முக்கிய புள்ளியான கருப்பசாமி பாண்டியனின் மரணம் மக்களிடையே பேரிடியாய் இறங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... கோவை, மதுரை மக்களுக்கு அமைச்சர் சொன்ன குட்நியூஸ்..!