அதிமுக விருதுநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக சமீபத்தில் கடுமையாக பேசியிருந்தார்.
சிவகாசியில் கடந்த 7ஆம் தேதி நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியபோது, “மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? பல கட்சிக்கு சென்றுவிட்டு வந்த பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகி கன்னத்தில் அறைந்தேன்.

அதிமுக ரத்தம் எனக்குள் ஓடுகிறது. ஆனால் உனது உடம்பில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக, அதிமுக, தேமுதிக, ஓபிஎஸ், அதிமுக… வெக்கமா இல்லையா உனக்கு? கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு? நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ, பைத்தியக்காரனோ அல்ல. தொலைத்துவிடுவேன்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
இதையும் படிங்க: ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆடிய மனைவி.. நடத்தையில் சந்தேகப்பட்டு வெட்டிக்கொன்ற கணவன்.. விருதுநகரில் பரபரப்பு..!
அன்றே ராஜேந்திர பாலாஜியின் இந்தப்பேச்சைக் கண்டித்து, நாடார்கள் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டினர். அதில், எங்கள் சமூக, படித்த பண்பாளர் மஃபா பாண்டியராஜனை அவமரியாதையாக பேசி, மிரட்டிய ராஜேந்திர பாலாஜியே நாடார் வாக்கு உனக்கும் உன் கட்சிக்கும் வேண்டாமா? நாவை அடக்கிப்பேசு'' என கண்டித்து இருந்தனர்.

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்திபோது கட்சியினருக்குள் எழும் மோதல் குறித்து பேசினார். “ஜெயலலிதா இருந்தபோது நமது கட்சியை ராணுவ கட்டுப்பாட்டோடு வைத்திருந்தார். ஆனால் இப்போது அந்த கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்பட்டிருக்கிறது. உட்கட்சியில் கோஷ்டி பூசல்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. ஆளாளுக்கு இஷ்டப்படி மீடியாக்களில் பேட்டி கொடுக்கிறீர்கள். இதையெல்லாம் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டேன்” எனக் கடுமையாக பேசினார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த கண்டிப்புக்குப் பிறகு ராஜேந்திர பாலாஜி,,''மாஃபா பாண்டியராஜன் குறித்து நான் பேசவே இல்லை. அதற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. மாஃபா பாண்டியராஜனுக்கும், எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. பொதுவான சில விஷயங்களை பற்றி மட்டுமே பேசினேன். முடிந்துபோன விஷயத்தை ஏன் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று மறுத்தார் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியை கண்டித்து மற்றொரு போஸ்டரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதில், தேவரினத்தை இழிவுபடுத்தி பேசி பொது மேடையில் தாக்கிய அதிமுகவை சேர்ந்த கேஏடி ராஜேந்திரபாலாஜி மீது காவல்துறையே நடவடிக்கை எடு'' என பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
ஒருபுறம் சிபிஐ வழக்குப்பதிந்துள்ளது ராஜேந்திர பாலாஜியில் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் தனது பலத்தை தக்க வைக்க சொந்தக்கட்சியினரிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க, தனது பேச்சால் நேற்று நாடார் சமூகத்தினர் ஒட்டிய போஸ்டர், இன்று தேவர் சமூகத்தினர் கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர் என நாலாபுறமும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட அதிமுக சீனியர்கள், ''விருதுநகர் அதிமுக-வில், பாண்டிய ராஜனுக்கும், ராஜேந்திர பாலாஜிக்கும் நீயா, நானா யுத்தம் நடந்து வருகிறது. பிரச்னை என்னவென்றால் பாண்டியராஜன், விருதுநகரில் சொந்த வீடு கட்டி குடியேறி விட்டார். 2026 சட்டசபை தேர்தலில் இங்கே போட்டியிட திட்டமிட்டு, கட்சியினரை சந்திப்பது, மூத்த தொண்டர்களுக்கு நிதியுதவி, அவர்களின் வாரிசுகளுக்கு கல்வி, தொழில் உதவி செய்வது வருகிறார். இதனால், 'விருதுநகரில் போட்டியிட்டால் அவர் வெற்றிபெற்று விடுவார்.

அதுவும் இல்லாமல் ராஜேந்திர பாலாஜி அவரது சொந்த ஊரான சிவகாசியில் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது. தான் தோற்றுப் போய் பாண்டியராஜன் ஜெயித்து விட்டால், தன் அரசியல் எதிர்காலம் அஸ்தமனம் ஆகிவிடும் என பயந்து தான், பாண்டியராஜன் மேல ராஜேந்திர பாலாஜி பாய்கிறார்'' என்கிறார்கள்.
இதையும் படிங்க: நீ நல்லா அசந்து தூங்கு தெய்வமே! மதுபோதையில் யானை மேல் மட்டையான பாகன்.. ஒரு மணி நேரம் காத்திருந்த யானை..!