"மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை; திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும்" என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்து விட்டார். தொடர்ந்து ஒரு படி மேலே சென்று, மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியே இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதற்கு சவாலாக உள்ளது. 2019, 2024 நாடாளுமன்ற தேர்தலில், அங்கு பாஜக, அதிக தொகுதிகளில் வென்றது. 2021 சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் 121 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது.
இந்நிலையில், டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து உள்ளது. இதனை அக்கட்சி தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள், டெல்லியை பிடித்து விட்டதால், அடுத்த மேற்கு வங்கத்தையும் பிடிப்போம் எனக் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: 26 ரபேல் போர் விமானங்கள், 3 நீர்மூழ்கி போர்க் கப்பல்கள்.. இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது..

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டுமே வென்று ஆட்சியைப் பறிகொடுத்துள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக் கூடப் பிடிக்க முடியவில்லை. இது இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதுதொடர்பாக பேசி இருக்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசுகையில், "டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் உதவவில்லை. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று விட்டது.

ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லை. நான் தனித்தே போட்டியிடுவேன். நாம் மட்டுமே போதும். மாநிலத்தில் மூன்றில் 2 பங்கு மெஜாரிட்டியுடன் 4-வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்.
தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே புரிதல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேசிய அளவில் பா.ஜனதாவை கட்டுப்படுத்துவது இந்தியா கூட்டணிக்கு கடினமாக இருக்கும்" என்றும் அவர் பேசியிருக்கிறார் .
கட்சி பிரிவுகளில் மாற்றம்:
கட்சியின் பிரிவுகளை மாநில அளவில் இருந்து பூத் மட்டும் வரை மாற்றி அமைக்க இருப்பதாகவும் அந்த பாலாஜி தெரிவித்ததாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக வருகிற 25-ம் தேதிக்குள் ஒவ்வொரு பதவிக்கும் மூன்று பெயர்களை பரிந்துரைக்கும் படி எம்எல்ஏக்களை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
*
இதையும் படிங்க: ஓபன் ஏஐ நிறுவனத்தை விலைபேசும் எலான் மஸ்க்.. ட்விட்டர் என்ன விலை என்று எதிர்வாதம் பேசும் சாம் ஆல்ட்மேன்...