ஹரியானா மாநிலத்தில் கர்ப்பணிப் பெண்கள் அனைவரும் பரிசோதனைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தங்கள் பெயரையும், எத்தனை மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதையும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் கர்ப்பணிப் பெண்களின் தனியுரிமை, அந்தரங்க உரிமை பாதிக்கப்படுகிறது, ஏற்கெனவே இருக்கும் கருக்கலைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இருக்கிறது என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஹரியானா மாநில சுகாதாரத்துறை இயக்குநர் இது தொடர்பாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பே அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன்படி, மாநிலத்தில் கர்ப்பிணிப்பெண்கள் குறித்த பதிவு 100 சதவீதம் எட்டப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதுவரை 50 முதல் 80 சதவீதம் வரை மட்டுமே பல்வேறு மாவட்டங்களில் பதிவு நடந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மையம், ஸ்கேன் பரிசோதனை மையத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் அந்த மையங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரியானாவில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை... தொடரும் அரசியல் கொலைகள்..!

ஹரியானா மாநில அரசின் குழந்தைப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் எனும் செயலியில் கண்டிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் குறித்த பதிவுகளை மருத்துவமனை பதிவு செய்ய வேண்டும். அதில் கர்ப்பணிப் பெண்களின் பெயர், ஆதார் எண், கணவர் பெயர், முகவரி, சாதி, கருவின் மாதம் ஆகியவை குறிப்பிட வேண்டும். இந்த பதிவேடு மூலம் கர்ப்பணிகளின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, மகப்பேறுகால மரணத்தைக் குறைப்பது, அவர்களுக்கு தேவையான முறையான, தரமான சிகிச்சையளிக்கவும், அரசின் பல்வேறு திட்டப்பயன்களையும் வழங்கவும் இந்த செயலி பயன்படுகிறது.

ஹரியானாவில் உள்ள இந்திய மருத்துவ கூட்டமைப்பு(ஐஎம்ஏ) வெளியிட்ட அறிவிப்பில் “ஹரியானா அரசின் நடவடிக்கையான கர்ப்பணிப் பெண்கள் பதிவு கட்டாயம் என்பது சிறப்பான செயல். 12 வாரங்கள்வரை கர்ப்பணிகளுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு முறையான சிகிச்சை,கண்காணிப்பு இருந்தால் தவிர்க்கப்படும், அது மட்டுமல்லாமல் பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் முயற்சியும் தடுக்ககப்படும். அதேசமயம், மாநில மருத்துவ கருக்கலைப்பு சட்டத்துக்கு இந்த விதிமுறைகள் முரணாக இருக்கிறது என்றும் தனியாக கடிதத்தில் தெரிவித்துள்ளது.

ஐஎம்ஏ முன்னாள் தலைவர் அஜெய் மகாஜன் கூறுகையில் “ ஹரியானா அரசின் கர்ப்பிணிப் பெண்கள் பதிவு நல்ல நோக்கில் இருந்தாலும், கர்ப்பிணிப்பெண்களின் தனியுரிமை, அந்தரங்க உரிமை பாதிக்கப்படும். இந்தத் திட்டத்தின் நலன்கள், தாக்கங்கள், பாதிப்புகள் குறித்து கலந்தாய்வு செய்யாமல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எம்டிபி சட்டத்தின் கீழ் கர்ப்பணிப் பெண்களின் பெயர், உள்ளிட்ட விவரங்களை வெளியிடக்கூடாது. ஆனால் அந்தச் சட்டத்துக்கு மாறாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹரியான உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி..! 7 மாநகராட்சிகளில் மண்ணை கவ்விய காங்கிரஸ்..!