மணிப்பூரில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரம் நிகழ்ந்து வருகிறது. மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையேயான இந்த கலவரத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

மேலும் வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.இதனிடையே மணிப்பூர் முதலமைச்சராக இருந்து வந்த பைரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: சிஏஜி நியமனத்தில் மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு..!

இந்த நிலையில் பி.ஆர்.கவாய் உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் வருகிற 22-ந்தேதி மணிப்பூர் செல்ல இருப்பதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூர் ஐகோர்ட்டின் 20-ம் ஆண்டு விழாவையொட்டி உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவருமான பி.ஆர்.கவாய், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோருடன் வருகிற 22-ந்தேதி மணிப்பூருக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது நீதிபதிகள் 6 பேரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் இந்த வருகை பாதிக்கப்பட்ட மக்ககளுக்கான சட்ட மற்றும் மனிதாபிமான உதவியின் தற்போதைய தேவையை வலியுறுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்ட உதவி மையங்களையும், மாநிலம் முழுவதும் உள்ள சட்ட சேவை முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம்களையும் நீதிபதி கவாய் தொடங்கி வைப்பார் என கூறியுள்ளது.

மேலும், தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி மற்றும் ஆதரவை வழங்குவதில் மணிப்பூர் மாநில சட்ட சேவைகள் ஆணையத்துடன் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக - மத்திய அரசு மோதல்..! ‘மொழி மதச்சார்பின்மையை ஆதரித்த உச்சநீதிமன்றம்’.. ஓர் பார்வை..!