மியான்மர் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரான மண்டாலே நகரை மையப்படுத்தி நேற்று மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான அந்த புவியதிர்வு மியான்மரை நிலைகுலையச் செய்தது.
இதையும் படிங்க: நடுநடுங்க வைத்த பூகம்பம்.. மியான்மரில் 650க்கும் மேற்பட்டோர் பலி.. நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா..!
இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுக்கள் போல சரிந்தன. மடாலயங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. பாலங்கள் தகர்ந்தன. வீடுகள் செங்கல், செங்கல்லாக உதிர்ந்தன. கிட்டத்தட்ட 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளாக மாறி உருக்குலைந்து கிடக்கின்றன.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் பற்றிய தகவல்கள் மெல்ல, மெல்ல வெளியாகி வருகின்றன. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருப்பதாகவும், இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிகிறது. இதுமட்டுமல்லாது காயம் அடைந்தவர்கள் பலரும் மருத்துவமனைகளில் குவிந்து வருவதால் அங்கு போதிய படுக்கைகள், மருந்து மாத்திரைகள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரை இயற்கையும் தன் பங்குக்கு சோதித்து இருப்பது கவலை அளிக்கிறது. மருத்துவ உதவிகளும், நிவாரண பொருட்களும் அதிக அளவில் தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டு நிலைமை மோசமடையுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.

இதையடுத்து மண்டாலே, சகாயிங், மாக்வே, வடகிழக்கு ஷான் மற்றும் பகோ பகுதிகளில் நிலநடுக்கத்தையொட்டி அவசரகால நிலையை அரசு பிறப்பித்து உள்ளது. நிவாரண பணிகளுக்காக முதற்கட்டமாக 50 லட்சம் அமெரிக்க டாலர்களை ஐக்கிய நாடுகள் சபை நல்கியுள்ளது.
மறுபுறம் தாய்லாந்தின் நாட்டின் பாங்காக் நகரையும் இந்த நிலநடுக்கம் நிலைகுலையச் செய்தது. அங்கு 10 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் வெறும் 2 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெளிவான தகவல்கள் வந்துள்ளன. மீட்பு பணிகள் வெகுவாக முடுக்கி விடப்பட்டுள்ளன. சுற்றுலாவை அதிகம் நம்பியுள்ள தாய்லாந்து அந்த துறை பாதிக்கப்படாத வண்ணம் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: தாய்லாந்து மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... சரிந்த கட்டிடங்கள்; குவிந்த சடலங்கள்!!