செய்த பாவங்கள் அனைத்தையும் போக்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசும் சிறை துறை நிர்வாகமும் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.
உத்தரபிரதேச சிறை நிர்வாகம், மாநிலம் முழுவதும் உள்ள 75 சிறைகளுக்கு பிரயாக்ராஜ் சங்கமத்திலிருந்து புனித நீரை கொண்டு வர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் மூலம் கைதிகள் மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி செய்த பாவங்களை அல்லது புண்ணியம் பெற வேண்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச சிறை துறை அமைச்சர் தாரா சிங் சவுகானின் உத்தரவின் படி, இந்த திட்டம் பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் காலை 10 மணி வரை அனைத்து சிறைகளிலும் நடைபெறும்.
மாநிலம் முழுவதும் உள்ள ஏழு மத்திய சிறைகள் உட்பட 75 சிறைகளில் தற்போது 90,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறை துறை அமைச்சரின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சிறைச்சாலை இயக்குநர் ஜெனரல் (டிஜி) பி.வி. ராமசாஸ்திரி தெரிவித்தார்.

கும்பமேளா சங்கமத்திலிருந்து புனித நீர் அனைத்து சிறைகளுக்கும் கொண்டு வரப்பட்டு வழக்கமான தண்ணீரில் கலக்கப்பட்டு சிறை வளாகத்திற்குள் ஒரு சிறிய தொட்டியில் சேமிக்கப்படும். அனைத்து கைதிகளும் பிரார்த்தனைக்குப் பிறகு தண்ணீரில் குளிப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சர் சவுகான், மூத்த சிறை அதிகாரிகளுடன் பிப்ரவரி 21 அன்று லக்னோ சிறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோரக்பூர் மாவட்ட சிறைச்சாலை ஜெயிலர் ஏ.கே. குஷ்வாஹா, பிரயாக்ராஜின் சங்கமத்திலிருந்து புனித நீரை சேகரிக்க சிறை நிர்வாகம் சிறைக் காவலர் அருண் மௌரியாவை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். கைதிகளும் மகா கும்பத்தில் பங்கேற்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக ‘கங்காஜல்’ வழக்கமான தண்ணீரில் கலக்கப்படும் என்று அவர் கூறினார்.

பிரயாக்ராஜ் நைனி மத்திய சிறைச்சாலையின் மூத்த கண்காணிப்பாளர் ரங் பகதூர், பிப்ரவரி 21 ஆம் தேதி கைதிகளுக்கும் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார். பிரயாக்ராஜ் மாவட்ட சிறைச்சாலையின் மூத்த கண்காணிப்பாளர் அமிதா துபே, சுமார் 1,350 கைதிகள் புனித நீராடல் எனப்படும் ‘ஸ்னான்’ பற்றி பேசும்போது உற்சாகமாக இருப்பதாக கூறினார். ஏனெனில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் பிரமாண்டமான நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததாக எண்ணி மகிழ்வார்கள் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிப்ரவரி 17 ஆம் தேதி உன்னாவ் சிறைச்சாலை அதன் கைதிகளுக்காக இதேபோன்ற திட்டத்தை ஏற்பாடு செய்தது. உன்னாவ் சிறை கண்காணிப்பாளர் பங்கஜ் குமார் சிங் கூறுகையில், கைதிகளுக்கு புனித நீரில் குளிப்பதற்கு வாய்ப்பு வழங்கும் திட்டம் சிறிது காலமாக பரிசீலனையில் இருந்தது. மேலும் பிப்ரவரி 21 ஆம் தேதி அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும், ஏனெனில் சிறை நிர்வாகம் அவர்களுக்கு மற்றொரு புனித நீராடல் எனப்படும் 'ஸ்நானம்' ஏற்பாடு செய்யும்.
தற்போது பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.