''தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது'' என மு.க.ஸ்டாலின் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ''தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 39 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 8 தொகுதியை குறைத்து 31-ஆக மாற்ற உள்ளனர். இது தொகுதிகள் எண்ணிக்கை பற்றிய கவலை மட்டுமல்ல இது மாநில உரிமை தொடர்பான பிரச்சனை . உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது

தென்னிந்தியாவின் தலைக்கு மேலே கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது தொகுதி மறுவரையறை என்ற பாஜகவின் சதித்திட்டம். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவம் குறையும். 39 தொகுதிகள் உள்ள தமிழ்நாடு 8 தொகுதிகளை இழக்க நேரிடும். தமிழ்நாட்டின் எதிர்க்காலம் காக்க கட்சி வேறுபாடு கடந்து அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.
இதையும் படிங்க: புறக்கணிக்கப்படுகிறாரா அமைச்சர் பொன்முடி...கடுப்பில் சீனியர்கள்...அதிமுகவிலிருந்து வருபவர்களுக்கே பதவி?
பொதுவாக இது மக்கள்தொகை கணக்கெடுப்பின்படிதான் செய்யப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது என்பது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது.
நாட்டில் ஒட்டுமொத்த எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதற்கேற்ப பிரித்தாலும் நமக்கு இழப்புதான் ஏற்படும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்தது. தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும். மீண்டும் ஒரு மொழிப்போருக்கு மத்திய அரசு வித்திடுகிறது, அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்” '' என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 'இந்தியை ஒழிப்பதும் கட்டாயமன்றோ..?- ஸ்டாலினின் எதிர்ப்பு: இது தேர்தலுக்காக திமுகவின் நாடகம்- தோலுரிக்கும் சீமான்..!