அமைச்சரின் தம்பி ராமஜெயம் கொலையிலேயே துப்பு துலக்க முடியவில்லை. இதில் பாமர மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருச்சியில் ராமஜெயம் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், ''ஒருவேளை நாங்க ஆட்சிக்கு வந்துதான் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த அளவுக்குத்தான் தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு இப்போது நடைமுறையில் இருக்கிறது. மிகப்பெரிய அமைச்சர். அவருடைய தம்பி கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகிறது. எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் இதே பிரச்சினைதான். இப்போது இந்த கொலையில் பல்வேறு துப்பாக்கி சூடுகள் நடைபெற்று உள்ளது. யார் அவர்களை சுடச் சொன்னது? சுட்டு பிடிக்கும் அளவுக்கு அது கலவரம் அல்ல. ஏனென்றால் மக்கள் எல்லோருக்கும் தெரியும். மக்கள்தான் அவரது மரணத்திற்கு முன் நின்று போராடினார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னின்று போராடவில்லை.
இதையும் படிங்க: தனித்து நிற்கதான் வீரம் தேவை..! விஜய் நிலைப்பாட்டை ஆதரிக்கும் சீமான்..!

கலவரம் நடக்கும் என்று முன்கூட்டியே தீர்மானித்தா காவலர்கள் குவிக்கப்பட்டு இருந்தார்கள்? இதில் பல்வேறு கேள்விகள் எழுகிறது. இப்போது கொடநாட்டில் கொலை நடந்திருக்கிறது. அது சாதாரண ஒரு இடம் அல்ல. ஒரு முன்னாள் முதலமைச்சருடைய வீடு. அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும். ஒரு நிமிடம் கூட அங்கு மின்சாரம் துண்டிக்கப்படாது. ஆனால், அங்கு ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வளவு கேள்விகள் இருக்கிறது அல்லவா?

அப்படியானால் அங்கே யார் செய்தது? அதேபோல் பொள்ளாச்சியில் பாலியல் வன்புணர்வு நடந்தது. அது எல்லோருக்கும் தெரியும். அந்த காணொளியை பார்த்து எல்லோரும் கோபப்பட்டார்கள், கதறினார்கள், வருத்தப்பட்டார்கள். அப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்ன திமுக இப்போது என்ன செய்கிறது? ஒவ்வொன்றையும் காலம் கடத்திவிடத் துடிக்கிறார்களே ஒழிய நியாயமான உண்மையான விசாரணை நடத்தி தண்டனைகளைப் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதில்லை.

இந்த அரசு தனக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்கிறது. மற்றவற்றை மூடி மறைத்து விடுகிறது. அப்படித்தான் தோன்றுகிறது. இப்போது டாஸ்மாக் ஊழல் என அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனை நடந்தது என்று உங்களுக்கு தெரியும். அந்த விசாரணை முடிந்து விட்டதா? முடியவில்லயா?சோதனையில் என்ன நடந்திருக்கிறது யாருக்காவது தெரியுமா? உண்மையிலேயே அதில் ஏதும் தவறு நடந்து இருக்கிறதா? இல்லையா? அதுக்கு நடவடிக்கை எடுக்குமா? முதலில் ஒரு லட்சம் கோடி என்றால்ர்கள். பிறகு ஓராயிரம் கோடி என்றார்கள்.
எதுவுமே இங்கு சரியாக இல்லை, முறையாக இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ராமஜெயம் கொலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒன்றும் வியப்பில்லை. தேவை என்றால் கண்டுபிடிப்பார்கள்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உழைப்பை சுரண்டாதீங்க..! அங்கன்வாடி பணியாளர்களுக்காக குரல் கொடுத்த சீமான்..!