அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரான கோவையில் தனது தடத்தை பதிக்க தொடங்கி விட்டது திமுக என்று சொல்லலாம். 30 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கோட்டையாக இருந்த கோவையில் மெல்ல மெல்ல ஓட்டையை போட்டு அசைக்க முடியாத அளவிற்கு தனது வாக்கு விகிதத்தை அதிகரித்து வைத்திருந்தது அதிமுக. செ .மா வேலுச்சாமி கிணத்துக்கடவு தாமோதரன் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட பலர் ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி அதிமுகவின் கட்டமைப்பை பலப்படுத்தினர்.
இது மட்டுமின்றி பொதுவாகவே கொங்கு மண்டல மக்கள் எம் ஜி ஆர் மற்றும் அதிமுக விசுவாசிகளாகவே இருந்து வந்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழகம் முழுவதும் திமுக பெருவாரியாக வெற்றி பெற்றாலும் கொங்கு மண்டலத்தில் பல தொகுதிகளில் மோசமான தோல்வியை பெற்றது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் 10-க்கு 10 என்ற அளவில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் திமுக தோல்வி அடைந்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அவ்வாறு வெற்றி பெற்றது ஒன்பது இடங்களில் அதிமுகவும் ஒரு இடத்தில் பாஜக வானதி சீனிவாசனும் வெற்றி பெற்றனர். அசைக்க முடியாத அதிமுகவின் கோட்டையாக விளங்கிய கோயம்புத்தூர் மாநகரத்தை அமைச்சர் சக்கரபாணியிடம் பொறுப்பு கொடுத்து இருந்தார் மு க ஸ்டாலின் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சக்கரபாணியை மாற்றிவிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் கொங்கு மண்டல பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: திமுகவுக்குள் வந்த நடிகர் சத்யராஜ் மகள்... பிரபலங்களுக்கு குறி வைக்கும் திமுக!
அதன் பின்னர் வந்த மேயர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் பெருவாரியான வெற்றி பெற்று அதிமுகவின் கோட்டைக்குள் ஓட்டையை போட்டனர் திமுகவினர். தற்போது சிறைவாசம் விசாரணை அமைப்புகளின் அழுத்தம் என பல நிலைகளில் இருந்து வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜி மீண்டும் தனது தீவிர களப்பணிகளை கொங்கு மண்டலத்தில் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது அதன் ஒரு பகுதியாக 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தற்போதைய திமுக தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் களத்தில் நிபுணத்துவம் பெற்ற செந்தில் பாலாஜியும் எஸ் பி வேலுமணியும் கொங்கு மண்டலத்தில் நேருக்கு நேர் கைகளை உயர்த்தி போட்டியில் குதிப்பதால் இது மிகப் பெரிய ஈகோ பிரச்சினையாக மாறி உள்ளது. கடந்த முறை போன்று ஏமார்ந்து விடாமல் பத்துக்கு பத்து தொகுதிகளையும் அடித்து தூக்க வேண்டும் என்பது செந்தில் பாலாஜியின் இலக்காம்.
இதில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தான் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி போட்டியிடுவார் அவருக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் வகையில் உள்ள ஒரு வேட்பாளரை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம் செந்தில் பாலாஜி.

எனவே தான் தொண்டாமுத்தூர் பகுதியில் ஏராளமான சொந்த பந்தங்களை கையில் வைத்துள்ள சத்தியராஜ் குடும்பத்தினரின் வாரிசான திவ்யா சத்யராஜை அங்கு களம் இறக்கலாம் என திமுக தரப்பில் முடிவெடுத்துள்ளார்களாம்.
அதன் காரணமாகவே சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து திவ்யா சத்யராஜ் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தார். எது எப்படியோ தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் உள்ள நிலையில் கோவை பகுதியில் தற்போது சூடு பறக்க தொடங்கியுள்ளது என்று கூறலாம்.
இதையும் படிங்க: இதோ வந்து விட்டார் திமுக ஆட்சியில் காணாமல் போயிருந்த கட்டப்பா… சத்யராஜை உசிப்பிவிட்ட சீமான்..!