மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக கேரளாவின் மூத்த தலைவர் எம்.ஏ.பேபி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

மதுரையில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டின் முடிவில், 16 பேர் கொண்ட பொலிட்பியூரோ அடுத்த பொதுச்செயலாளருக்கு எம்.ஏ.பேபி பெயரை ஒருமனதாக பரிந்துரை செய்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மார்க்சிக்ஸ்ட் கட்சியினர் மகாராஷ்டிரா தலைவர் அசோக் தவாலேவுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால், பேபிக்கு பொலிட்பியூரோவில் பெரும்பான்மை ஆதரவு இருந்தது. மேலும், கேரளாவில் முதல்வராகத் தொடர பினராயி விஜயனுக்கும் பொலிட்பியூரோ அனுமதியளித்தது.
இதையும் படிங்க: சிபிஐ(எம்)-ல் இணைகிறார் சசிதரூர்..? உண்மையை உடைத்த பிரகாஷ் காரத்..!
மதுரையில் நேற்று இரவு பொலிட்பியூரோ கூட்டம் நடந்தது, இதில் அடுத்த பொதுச் செயலாளரா எம்.ஏ. பேபி பெயரை பிரகாஷ் காரத் முன்மொழிந்தார். ஆனால் பொலிட்பியூரோவில் 16 பேரில் 5 பேர், சூர்யகாந்த் மஸ்ரா, மேற்கு வங்க செயலாளர் முகமது சலீம், நிலோத்பால் பாசு, ராமச்சந்திர தோம் ஆகியோர் தவாலே பெயரை பெயரை முன்மொழிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பொலிட்பியூரோவின் இறுதி முடிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) எடுக்கப்பட்டது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக பேபிக்கு ஆதரவு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், பொலிட்பியூரோவில் புதிய உறுப்பினர்களாக மரியம் தவாலே, யு.வாசுகி, அம்ரா ராம், விஜூ கிருஷ்ணன், அருண் குமார், ஸ்ரீதீப் பட்டாச்சார்யா ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டன. 75 வயதைக் கடந்த பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மாணிக் சர்க்கார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளனர். மேலும், மத்தியக் குழு உறுப்பினர்களாக இருக்கும் பி.கே.ஸ்ரீமதி, முகமது யூசுப் தாரிகாமி ஆகியோருக்கு நீட்டிப்பு அளித்தும் பொலிட்பியூரோ முடிவு செய்துள்ளது.
யார் இந்த பேபி..?
கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஏ.பேபி (வயது70). படிக்கும் காலத்திலேயே எஸ்எப்ஐ இயக்கத்தில் பேபி பங்கேற்று செயல்பட்டு, பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலும் பேபி இருந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 1986 முதல் 1998 வரை எம்பியாகவும் பேபி இருந்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த செப்டம்பரில் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததையடுத்து,புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்படாமல் இருந்தது. அவரின் இடத்துக்கு தகுந்த நபரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் பொலிட்பியூரோ பேபி பெயரை பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்க்கிற்கு எதிர்ப்பு.. வலுக்கும் மக்கள் போராட்டம்..!